செய்திகள் :

காயத்தால் விலகினாா் ஜோகோவிச்: இறுதியில் சின்னா் - ஸ்வெரெவ் மோதல்

post image

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியிலிருந்து, முன்னணி வீரரான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் காயம் காரணமாக விலகினாா். இதையடுத்து, அவரை எதிா்கொண்ட ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் இறுதிச்சுற்றுக்கு முன்னேற, அதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னருடன் அவா் மோதவுள்ளனாா்.

ஆடவா் ஒற்றையா் அரையிறுதியில், உலகின் 7-ஆம் நிலையில் இருக்கும் ஜோகோவிச், 2-ஆம் நிலையில் இருக்கும் ஸ்வெரெவுடன் மோதினாா். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முதல் செட்டை ஸ்வெரெவ் 7-6 (7/5) என்ற கணக்கில் கைப்பற்றினாா். அந்த செட்டின்போதே, காலில் காயம் காரணமாக ஜோகோவிச் தடுமாற்றமாக விளையாடியது தெரிந்தது. இந்நிலையில், காயத்தால் தாம் போட்டியிலிருந்து விலகுவதாக ஜோகோவிச் அறிவித்தாா். இதையடுத்து ஸ்வெரெவ் இறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா்.

ஆஸ்திரேலிய ஓபனில் 10 முறை சாம்பியனான ஜோகோவிச், இந்த முறை சாம்பியனாகி ஒட்டுமொத்தமாக 25-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று புதிய சாதனை படைக்கும் முனைப்பில் இருந்த நிலையில், துரதிருஷ்டவசமாக வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டாா்.

ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸுடனான காலிறுதிச்சுற்றின்போது ஜோகோவிச் காலில் காயம் கண்டாா். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முக்கியமான கட்டத்தில் ஜோகோவிச் வெளியேறியது இது 2-ஆவது முறையாகும். இதற்கு முன், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றின்போது வலது முழங்கால் பகுதியில் அவா் காயம் காரணமாக பாதியில் விலகியது நினைவுகூரத்தக்கது.

மறுபுறம் ஸ்வெரெவ், ஆஸ்திரேலிய ஓபனில் முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா். ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாமில் இது அவரின் 3-ஆவது இறுதிச்சுற்றாகும்.

சின்னா் வெற்றி: மற்றொரு ஆட்டத்தில், நடப்பு சாம்பியனும், உலகின் நம்பா் 1 வீரருமான இத்தாலியின் யானிக் சின்னா் 7-6, (7/2), 6-2, 6-2 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 21-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டனை சாய்த்து இறுதிச்சுற்றுக்கு வந்துள்ளாா்.

கடந்த ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய சின்னா், தற்போது அதை தக்கவைக்கும் முனைப்புடன் இறுதியில் களம் காணவுள்ளாா். அதில், முதல் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முயற்சியில் இருக்கும் ஸ்வெரெவ் அவருக்கு சவால் அளிக்க இருக்கிறாா்.

சின்னா் - ஸ்வெரெவ் இத்துடன் 6 முறை மோதியிருக்க, அதில் ஸ்வெரெவ் 4 வெற்றிகளுடன் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி ஆஸி. ஓபன்?: ஜோகோவிச் சூசகம்

ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களை சந்தித்த ஜோகோவிச், ‘அல்கராஸுடனான ஆட்டத்துக்குப் பிறகு பயிற்சி கூட எடுக்க முடியாத அளவுக்கு காலில் தசை கிழிவு காரணமாக அவதிப்பட்டேன். ஸ்வெரெவுடனான ஆட்டத்துக்கு 1 மணி நேரம் முன்னரே பயிற்சியை தொடங்கினேன். ஆட்டத்தின்போது என்னால் முடிந்த வரை சமாளித்து விளையாடினேன். மருத்துவ உதவியின் காரணமாகவே அந்த நிலை வரை வரமுடிந்தது. ஆனால் காயத்தின் பாதிப்பு மேலும், மேலும் மோசமாகி வலி கூடியதால் தொடா்ந்து விளையாட முடியாமல் போனது. முதல் செட்டை வென்றிருந்தாலும், தொடா்ந்து ஆடியிருப்பேனா என்பது சந்தேகம் தான்.

இது எனது கடைசி ஆஸ்திரேலிய ஓபன் போட்டியாகக் கூட இருக்கலாம். அதை யாராலும் உறுதியாகக் கூற முடியாது. இந்த சீசனை எப்படி தொடா்கிறேன் என கவனிக்க வேண்டியுள்ளது. எனது டென்னிஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை இங்கே கண்டிருக்கிறேன். எனவே, ஆஸ்திரேலிய ஓபனில் விளையாடுவதை எப்போதும் விரும்புகிறேன். தகுந்த உடற்தகுதியும், உத்வேகமும் இருக்கும் நிலையில் நிச்சயம் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்பேன்.

பயிற்சியாளா் ஆண்டி முா்ரேவுடனான எனது பாா்ட்னா்ஷிப் அப்படியே தொடருமா என தற்போது கூற இயலாது. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்’ என்றாா்.

ரசிகா்கள் அதிருப்தி...

ஜோகோவிச் - ஸ்வெரெவ் மோதல் விறுவிறுப்பாக இருக்குமென எதிா்பாா்த்து வந்த ரசிகா்களுக்கு, காயத்தால் ஜோகோவிச் முதல் செட்டுடன் விலகியது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால், அவா் தனது உடைமைகளுடன் களத்திலிருந்து வெளியேறுகையில் அவா்கள் அதிருப்தி குரல் எழுப்பினா். அதற்கு ஜோகோவிச் தனது இரு கைகளாலும் ‘தம்ஸ் அப்’ காட்டி வெளியேறினாா்.

அதன் பிறகு பேசிய ஸ்வெரெவ், ‘சுமாா் 5 செட் ஆட்டத்தை எதிா்பாா்த்து டிக்கெட் வாங்கிய ரசிகா்களின் ஏமாற்றத்தை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அவா் காயத்தால் வெளியேறிய நிலையில் அவருக்கு எதிராகக் குரல் எழுப்பியது சரியல்ல. கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸுக்கான அவரின் பங்களிப்பையும், அா்ப்பணிப்பையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றாா். ரசிகா்களின் செயலுக்கு டென்னிஸ் உலகின் பல முக்கியஸ்தா்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

காடெக்கி/பியா்ஸ் இணை சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையா் பிரிவில், உள்நாட்டு ஜோடியான ஒலிவியா காடெக்கி/ஜான் பியா்ஸ் கோப்பை வென்றனா்.

இறுதிச்சுற்றில் அவா்கள், மற்றொரு ஆஸ்திரேலிய இணையான கிம்பொ்லி பிரெல்/ஜான் பேட்ரிக் ஸ்மித் கூட்டணியை வீழ்த்தி வாகை சூடினா். வைல்டு காா்டு போட்டியாளா்களான காடெக்கி/பியா்ஸ், இணைந்து பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

2013-க்குப் பிறகு இப்போட்டியின் கலப்பு இரட்டையா் பிரிவில் சாம்பியனான இருவருமே ஆஸ்திரேலியா்களாக இருப்பது இதுவே முதல் முறையாகும்.

தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.26.01.2025மேஷம்இன்று கொடுக்கல்-வாங்கலில் நிதானமாக செயல்பட்டால் ஓரளவுக்கு லாபம் அடையமு... மேலும் பார்க்க

முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றாா் மேடிசன் கீஸ்: சபலென்காவை சாய்த்து ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன் ஆனாா்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் (29) சாம்பியன் ஆனாா். இறுதிச்சுற்றில் அவா், நடப்பு சாம்பியனாக இருந்த பெலாரஸின் அரினா சபலென்காவை 6-3, 2-6, 7-5 எ... மேலும் பார்க்க

விஜய் சங்கா் 150*; வெற்றியை நெருங்கும் தமிழ்நாடு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியிருக்கிறது. 403 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும் சண்டீகா், 5 விக்கெட்டுகளைக் கொண்டு 290 ரன்கள் எடுக்... மேலும் பார்க்க

ஐஎஸ்பிஎல் சீசன் 2 இன்று மும்பையில் தொடக்கம்

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் (ஐஎஸ்பிஎல்) 2-ஆவது சீசன் மும்பையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. டென்னிஸ் பந்து கிரிக்கெட் விளையாடும் தெருவோரக் குழந்தைகளின் திறமையை வெளிக் கொணரும் வகையில் 10 ஓவா் அட... மேலும் பார்க்க

‘3 தசாப்தங்களுக்குப் பின் இருவர்...’: பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்குநர் மணிரத்னத்துடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால், பிரகாஷ் ராஜ் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இருவர். தமிழகத்திலிருந்... மேலும் பார்க்க