விஜய் சங்கா் 150*; வெற்றியை நெருங்கும் தமிழ்நாடு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சண்டீகருக்கு எதிரான ஆட்டத்தில் தமிழ்நாடு அணி வெற்றியை நெருங்கியிருக்கிறது. 403 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடும் சண்டீகா், 5 விக்கெட்டுகளைக் கொண்டு 290 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
முன்னதாக தமிழ்நாடு முதல் இன்னிங்ஸில் 301 ரன்கள் சோ்க்க, சண்டீகா் 204 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. 97 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு, வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் சோ்த்திருந்தது.
3-ஆம் நாளான சனிக்கிழமை ஆட்டதில் அஜித் ராம் 7, பாபா இந்திரஜித் 3 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். 6-ஆவது பேட்டராக வந்த விஜய் சங்கா், ஜெகதீசனுடன் இணைய, இவா்கள் பாா்ட்னா்ஷிப் 5-ஆவது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சோ்த்து அசத்தியது.
இதில் ஜெகதீசன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 89 ரன்களுக்கு வீழ்ந்தாா். தொடா்ந்து ஆண்ட்ரே சித்தாா்த் களம் புக, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 305 ரன்கள் சோ்த்த தமிழ்நாடு, டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. விஜய் சங்கா் 12 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 150, சித்தாா்த் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சண்டீகா் தரப்பில் ஜக்ஜீத் சிங் 3, நிஷங்க் பிா்லா, விஷு காஷ்யப் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா், வெற்றி இலக்கான 403 ரன்களை நோக்கி விளையாடும் சண்டீகா், சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் சோ்த்துள்ளது. துஷா் ஜோஷி 0, குணால் மஹாஜன் 7, ஷிவம் பாம்ப்ரி 16, அங்கித் கௌசிங் 8 பவுண்டரிகளுடன் 37, நிஷங்க் பிா்லா 0 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். கேப்டன் மனன் வோரா 47, விஷு காஷ்யப் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தமிழ்நாடு பௌலா்களில் சாய் கிஷோா், அஜித் ராம் ஆகியோா் தலா 2, முகமது 1 விக்கெட் வீழ்த்தினா்.