கர்நாடக முதல்வர் மனைவியிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு இடைக்கால தடை!
கோப்பையை தக்கவைத்தார் சின்னர்!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், இறுதிச்சுற்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவை வீழ்த்தி கோப்பையை ஞாயிற்றுக்கிழமை தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு இதே ஆஸ்திரேலிய ஓபன் மூலமாக தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றிய சின்னர், தற்போது அதே போட்டியில் தனது 3-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இடையே, கடந்த ஆண்டு யுஎஸ் ஓபன் போட்டியில் அவர் வாகை சூடியதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், முதல் கிராண்ட்ஸ்லாம் வெல்லும் முனைப்புடன் களம் கண்ட ஸ்வெரெவ், இந்த முறையும் அதில் தோற்றிருக்கிறார். கிராண்ட்ஸ்லாம் போட்டியின் இறுதிச்சுற்று வரை வந்து, அவர் தோல்வியை சந்தித்தது இது 3-ஆவது முறையாகும். இதற்கு முன் கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், 2020 யுஎஸ் ஓபன் போட்டிகளிலும் அவர் சாம்பியன்ஷிப் ஆட்டம் வரை வந்தார்.
முன்னதாக, இந்த ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரரான சின்னர் - நம்பர் 2 வீரரான ஸ்வெரெவ் மோதிய இறுதிச்சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் சின்னர் 6-3, 7-6 (7/4), 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அசத்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 42 நிமிஷங்களில் நிறைவடைந்தது. சின்னர் - ஸ்வெரெவ் 7-ஆவது முறையாக சந்தித்த நிலையில், சின்னர் தனது வெற்றி எண்ணிக்கையை 3-ஆக அதிகரித்துக் கொண்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தோடு, உலகின் நம்பர் 1 இடத்தையும் சின்னர் தக்கவைத்துக் கொண்டார்.
கடந்த ஆண்டு தொடக்கம் முதலே அசத்தி வரும் சின்னர், இந்த ஜனவரி வரையில் 5 பிரதான போட்டிகளில் 3-இல் சாம்பியன் ஆகியிருக்கிறார். மொத்தமாக 9 போட்டிகளில் கோப்பை வென்றுள்ளார். அவரின் வெற்றி - தோல்வி கணக்கு 80}6 என்ற அளவில் இருக்க, தற்போது தொடர்ந்து 21 ஆட்டங்களில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஊக்கமருந்து புகாரில் சின்னர் பரவலாக விமர்சனத்துக்கு ஆளாகியிருந்தார். சிகிச்சைக்கான மருந்தாலேயே தனது மாதிரியில் ஊக்கமருந்து கலந்ததாக சின்னர் அளித்த விளக்கம் ஏற்கப்பட்டு, அவருக்கு தடை விதிக்கப்படவில்லை.
எனினும், ஊக்கமருந்து தடுப்பாக்கான உலக அமைப்பு (வாடா) அவருக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதன் விசாரணை ஏப்ரலில் நடைபெறுகிறது.
ரூ.19 கோடி ரொக்கப் பரிசு
சாம்பியன் ஆன சின்னருக்கு ரூ.19 கோடியும், இறுதியில் தோற்ற ஸ்வெரெவுக்கு ரூ.10 கோடியும் ரொக்கப் பரிசாகக் கிடைத்தது.
"இந்த வெற்றிக்காக எங்கள் அணியினர் அதிகம் உழைத்திருக்கிறோம். எனவே, இந்த வெற்றித் தருணம் சிறப்பானது. ஸ்வெரெவுக்கு இது கடினமான நாளாக அமைந்தது. ஆனால் அவர் நம்பிக்கையுடன் தொடர்ந்து விளையாட வேண்டும். ஒரு வீரராகவும், தனிமனிதனாகவும் அவர் எவ்வளவு மனபலம் கொண்டவர் என அனைவருக்கும் தெரியும்'- யானிக் சின்னர்
"சின்னருக்கு வாழ்த்துகள். நீங்கள் இந்த வெற்றிக்கு தகுதியானவர். உலகிலேயே தற்போது சிறந்த டென்னிஸ் வீரர் நீங்கள் தான். இறுதிச்சுற்றில் நல்லதொரு சவாலை அளிப்பேன் என நம்பினேன். ஆனால், நீங்கள் மிகச் சிறப்பாக விளையாடினீர்கள்.’- அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ்