புலி தாக்கியதில் பெண் தொழிலாளி பலி!
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் புலி தாக்கியதில் காபி தோட்டத்தின் பெண் தொழிலாளி ஒருவர் பலியாகியுள்ளார்.
வயநாட்டின் மனந்தாவடி பகுதியிலுள்ள தனியார் காபி தோட்டத்தில் அங்கு பணிப்புரியும் ராதா (வயது 45) என்ற பழங்குடியின பெண் ஒருவர் இன்று (ஜன.24) காலை காபிக் கொட்டைகள் பறிபதற்காக சென்றுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த புலி ஒன்று அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், அந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜன.24) கேரள காவல் மற்றும் வனத்துறையினர் இணைந்து மனந்தாவடி பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக காப்பி தோட்டத்தினுள் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிக்க: லட்ச ரூபாய் முதலீட்டில் கோடிகளை அளித்த 2 நிறுவனங்கள்!
அப்போது, புலியால் தாக்கப்பட்டு பலியான ராதாவின் உடல் பாதி உண்ணப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை சுற்றியிலும் புலியின் கால்தடங்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பெண்ணின் உடல் கைப்பற்றப்பட்டு அந்த புலியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, புலி தாக்கியதில் பலியான ராதாவின் கணவர் அச்சப்பன் வனத்துறையில் கண்கானிப்பாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.