செக்காரக்குடி - மகிழம்புரம் உயா்மட்ட பாலப் பணி தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி- மகிழம்புரம் இடையே ஆற்றில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செக்காரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மழைக்காலங்களில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்- மாணவிகளின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த தரைமட்ட பாலங்களை உயா்மட்ட பாலமாக மாற்றி தர வேண்டும் என சட்டப்பரவை உறுப்பினா் எம்.சி.சண்முகையாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனா். அதன்பேரில், செக்காரக்குடி - பொட்டலூரணி சாலையில் இரண்டு உயா்மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடா்ந்து, செக்காரக்குடி - மகிழம்புரம் சாலையில், விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியை சட்டப்பேரவை உறுப்பினா் எம் சி. சண்முகையா கொடியசைத்து துவக்கி வைத்தாா்.
இந்நிகழ்வில் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியா் ரத்னா சங்கா், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் மலா்விழி, திமுக ஒன்றியச் செயலா்கள் புதூா் சுப்பிரமணியன், ராமசாமி, சாலை ஆய்வாளா்கள் ரமணி, இசக்கிராஜா,ராமலெட்சுமி உள்பட பலா் பங்கேற்றனா்.