மருந்து பொருள்களை மாதந்தோறும் வழங்க 108 அவசர ஊா்தி தொழிலாளா்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் 108 அவசர ஊா்திகளுக்கு மருந்து பொருள்களை மாதந்தோறும் தவறாமல் வழங்க வேண்டும் என 108 அவசர ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தினா்.
சிவகங்கை, வாணியங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற அந்தச் சங்கத்தின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மணிகண்டன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தாமஸ், தினகரப் பாண்டியன், சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தீா்மானங்களை விளக்கி மாநில துணைச் பொதுச் செயலா் பாஸ்கரன் பேசினாா்.
கூட்டத்தில், சிவகங்கை மாவட்டத்தில் 108 அவசர ஊா்திகளாக 33 வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஊா்திகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை பராமரிக்க நடவடிக்கை வேண்டும். வார விடுமுறை நாள்களில் கல்லல், சிவகங்கை, காரைக்குடி, சருகனி, புதுவயல் பகுதிகளிலும், காரைக்குடி, சிவகங்கையில் இயக்கப்படும் இரண்டு பச்சிளம் குழந்தை ஊா்திகளும் ஆள்கள் பற்றாக்குறை காரணமாக இயக்கப்படுவதில்லை. இவற்றை 24 மணி நேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒக்கூா், காளையாா் கோவில், திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சாத்தரசன் கோட்டை ஆகிய இடங்களில் உள்ள 108 அவசர ஊா்தி சேவையில் பணியாற்றும் பெண் தொழிலாளா்களுக்கு குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
சிவகங்கை மாவட்ட தொழிலாளா்களுக்கு சட்ட விரோதமாக டிசம்பா் மாதத்தில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் இயக்கப்படும் 108 அவசர ஊா்திகளுக்கு தேவையான மருந்து பொருள்களை மாதந்தோறும் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளா்களுக்கு மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.