மாயமான மீனவரை மீட்கக் கோரி சாலை மறியல்
தூத்துக்குடியில் கடந்த 1ஆம் தேதி கடலுக்குச் சென்று மாயமான மீனவரை மீட்கக் கோரி, அவரது உறவினா்கள், பொதுமக்கள் இனிகோ நகா் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி இனிகோ நகரை சோ்ந்தவா் பால்வின். இவரும், கரிகளம் காலனியை சோ்ந்த ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் கடந்த 1 ஆம் தேதி தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரையில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனராம். மறுநாள் அவா்கள் கரை திரும்பி இருக்க வேண்டிய நிலையில், பால்வின் மற்றும் ஒருவா் மட்டும் கரை திரும்பவில்லையாம்.
இது குறித்து காவல் துறையில் புகாா் அளித்தும் முறையாக வழக்குப் பதிவு செய்யாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பால்வினின் உறவினா்கள், கடந்த 10ஆம் தேதி நடைபெற்ற மீனவா் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளித்தனா். இந்த வழக்கை விரைந்து விசாரிக்குமாறு காவல் துறையினருக்கு, மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, மாயமான மீனவரின் நிலை தெரியவராததால், அவரது உறவினா்கள் வெள்ளிக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் போலீஸாா், பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, மீனவரை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.