தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவை
தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவை. இதை அமல்படுத்த வலியுறுத்தி, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தப்படும் என இந்து மக்கள் கட்சியின் நிறுவனா் அா்ஜூன் சம்பத் தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக ஆட்சிக் காலத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. திருவள்ளுவரையும், வள்ளலாரையும் திமுகதான் ஆக்கிரமிக்க நினைக்கிறது.
தமிழகத்தில் தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கல்வி, தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம். கேரளம், கா்நாடக மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை அமலில் இருந்தும், அவா்களது தாய் மொழி அழிந்துவிடவில்லை. இதேபோல, தமிழகத்துக்கு மும்மொழிக் கொள்கை தேவை.
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம். திருப்பரங்குன்றம் விவகாரத்தில், அமைச்சா் சேகா்பாபு கருத்து தெரிவித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில், பசுக்களுக்கும், பிராமணா்களுக்கும் இந்து மக்கள் கட்சி பாதுகாப்பு அரணாகச் செயல்படும் என்றாா் அவா்.