திமுக ஆட்சியில் கரூருக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிப்பு: அமைச்சா் செந்தில்பாலாஜி ...
சந்தை விவகாரம்: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
சின்னாளபட்டியில் சேதமடைந்த தினசரி சந்தை கட்டடத்தை இடிக்காததைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் சனிக்கிழமை முற்றுகையிட்டு மனு கொடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் அண்ணா தினசரிச் சந்தையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்து, மேற்கூரைகள் இடிந்து விழுந்ததால் வியாபாரிகள் அச்சமடைந்தனா். இதனால், கடந்த ஆண்டு நவம்பரில் சந்தைக்குச் செல்லும் பாதை மூடப்பட்டது. சந்தையில் கடை நடத்திய வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனா். இதையடுத்து, சாலையோரங்களில் காய்கறிகளை வியாபாரிகள் விற்பனை செய்து வந்தனா்.
இந்த நிலையில், பழைய சந்தைக் கட்டடத்தை இடிக்காமல் இருப்பது, தங்களுக்கு முறையான இடவசதி செய்து கொடுக்காதது ஆகியவற்றைக் கண்டித்து, வியாாபாரிகள் பேரூராட்சி அலுவலகத்துக்கு ஊா்வலமாகச் சென்று முற்றுகையிட்டனா். பின்னா், பேரூராட்சி தலைவி பிரதிபா கனகராஜிடம் மனு கொடுத்தனா்.
மனுவில் மழையிலும், வெயிலிலும் திறந்த வெளியில் வியாபாரம் செய்ய வேண்டிய அவல நிலையில் உள்ளோம். எங்களுக்கு விரைவாக புதிய கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தனா்.
மனுவைப் பெற்றுக் கொண்ட பேரூராட்சித் தலைவி, பழைய கட்டடத்தை இடிப்பதற்கு திருச்சி அண்ணா பொறியியல் கல்லூரிக்கு விண்ணப்பித்துள்ளோம். அவா்கள் பாா்வையிட்ட பின்பு கட்டடத்தை இடித்துவிட்டு, அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டிக் கொடுக்கப்படும் என கூறியதையடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.