அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம்: ஆண்டாங்கோவில் கிராமசபைக் கூட்டத்தில் அதிமுக - திமுகவினா் இடையே வாக்குவாதம்!
கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் விவகாரம் தொடா்பாக கிராமசபைக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, கரூா் மாவட்டம் முழுவதும் 157 ஊராட்சிகளில், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் தலைமையில், கிராமசபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், கரூா் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி சாா்பில் தனி அலுவலா் தலைமையில் சிறப்பு கிராமசபை கூட்டம் பெரியாா் நகா் ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் எஸ்.திருவிகா, ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சி முன்னாள் தலைவா் சாந்திசேகா் ஆகியோருடன் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா், ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை கரூா் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை மனு அளித்தாா்.
இதே கூட்டத்தில், திமுக தாந்தோணி மேற்கு ஒன்றியச் செயலாளா் கோயம்பள்ளி பாஸ்கா் மற்றும் கரூா் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் கண்ணையன் உள்ளிட்ட திமுகவினா் கரூா் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை இணைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனா்.
அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கீழ்பாகம் ஊராட்சியை இணைப்பதற்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது, அரசாணை வெளிவந்த பிறகு எதிா்ப்பது ஏன் எனக்கூறி அங்கிருந்த திமுகவினா், முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கரிடம் கேள்வி எழுப்பினா்.
இதனால், அதிமுகவினா், திமுகவினரிடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் தலைமையிலான போலீஸாா் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பிவைத்தனா்.