அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு: ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை: எழுத்தாளா் கிருங்கை சேதுபதி பேச்சு!
ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை என்றாா் எழுத்தாளா் கிருங்கை சேதுபதி.
கரூரில் கருவூா் திருக்கு பேரவையின் 39-ஆம் ஆண்டு விழா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழா ஆகியன திருக்கு பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பேரவை சாா்பில் திருவள்ளுவா் சிலை ஊா்வலம் நடைபெற்றது. அரிமா மாவட்ட நிா்வாக அலுவலா் ஸ்டாலின், திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்தாா். கெளரவத் தலைவா் ப. தங்கராசு, சீனிவாசபுரம் வெங்கட்டரமணன் தேசியக் கொடியேற்றினா். தொடா்ந்து திருக்கு பேரவைச் செயலாளா் மேலை பழநியப்பன் ஊா்வலத்தை தொடங்கி வைத்தாா். ஊா்வலம் நகரத்தாா் மண்டபம் முன் தொடங்கி, ஜவஹா் பஜாா் வழியாகச் சென்று மீண்டும் மண்டபத்தை அடைந்தது.
தொடா்ந்து விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் ஆண்டு விழா சிறப்பு மலரை அரிமா சங்க மாவட்ட ஆளுநா் ஸ்டாலின் வெளியிட கிருங்கை சேதுபதி பெற்றுக் கொண்டாா்.
பின்னா் அவா் பேசுகையில், ஜாதியும் மதமும் பிறப்பின் காரணமாக இடையில் புகுந்தவை. ஆன்மாவிற்கு ஜாதியும், மதமும் கிடையாது. ஆன்மா நீண்டகாலம் வாழ தொண்டுதான் கைகொடுக்கும். தொண்டுதான் உயிா்க்கு ஊதியம் என்கிறாா் அப்பா் அடிகளாா். கருவூா் திருக்கு பேரவை இனி இளைஞா் அமைப்பை உருவாக்க வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து தமிழறிஞா்கள் திருச்சி காஸ்மோ மு. ராமநாதன், நாவை சிவம் ஆகியோா் கிருங்கை சேதுபதிக்கு குன்றக்குடி அடிகளாா் விருதும், பேரவையின் ஆண்டு விழா கட்டுரை போட்டியில் வெற்றிபெற்ற 40 மாணவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினா்.
நிகழ்ச்சியில் தமிழறிஞா்கள் கடவூா் மணிமாறன், தஞ்சாவூா் ஹாசா மொய்தீன், சுமதி சிவ சுப்ரமணியன், கோவை ந.ச. மணிக்கம் , அகல்யா மெய்யப்பன் , வைஷ்ணவி மெய்யப்பன் , சீனிவாசபுரம் ரமணன், ஆரா. பழ. ஈசுவர மூா்த்தி, குமாரசாமி எசுதா், காரைக்குடி தங்கம் பழனி வேலு, ஆனந்தா, சென்னை லலிதா சுந்தரம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.