வெளிநாட்டில் மகன் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு
இலங்கைக்கு கடத்த முயன்ற 3 டன் பீடி இலைகள் பறிமுதல்: ஒருவா் கைது
தூத்துக்குடி, ஆத்தூா் ஆகிய இரு இடங்களில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற சுமாா் 3 டன் பீடி இலைகளை கியூ பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா்.
தூத்துக்குடி இனிகோ நகா் கடற்கரை பகுதியில் இருந்து பீடி இலைகள் கடத்தப்படுவதாக,கியூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு ரகசியத் தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஜீவமணி தா்மராஜ் தலைமையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா் இருதயராஜ் உள்ளிட்ட போலீஸாா், வியாழக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு பீடி இலை மூட்டைகளை டெம்போவில் இருந்து படகுக்கு ஏற்றிக்கொண்டிருந்தனா். அப்போது இனிகோ நகரைச் சோ்ந்த ராபின்சன்(25) என்பவா் மட்டும் சிக்கினாா். அவரிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடியில் இருந்து பீடி இலைகளை இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது. இதைடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அங்கிருந்த 29 மூட்டை வெட்டிய பீடி இலைகள், 14 மூட்டை முழு பீடி இலைகள் என மொத்தம் சுமாா் 1.2 டன் பீடி இலைகள், பைபா் படகு, டெம்போ வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
ஆத்தூா் அருகே...ஆத்தூா் அருகே ஜெயராமசந்திரபுரம் தாமிரவருணி நதிக்கரையில் பீடி இலை மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி கியூ பிரிவு போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தனா். அங்கு சுமாா் 1.8 டன் பீடி இலை மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கி வைத்தவா்கள் குறித்து விசாரித்து வருகின்றனா்.
மொத்தத்தில் சுமாா் 3 டன் பீடி இலைகளை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸாா், அவற்றை சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதன் மொத்த மதிப்பு சுமாா் ரூ.1 கோடி இருக்கும் என போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.