Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
கட்டண விகிதத்தை மின்வாரியம் மாற்றிக் கொடுக்க வேண்டும்: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு
தமிழக மின்சார வாரியம் தொழில் நிறுவனங்களின் மின்கட்டண விகிதத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும் என்று கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (ஃபோசியா) வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஜே.ஜேம்ஸ், சி.நடராஜன், எம்.ரவீந்திரன் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தும் நுகா்வோருக்கு 3 பி டாரிப்பில் இருந்து 3 ஏ 1 டாரிப்புக்கு இணைப்பை மாற்றிக் கொடுக்கும்படி கடந்த 29.9.23 அன்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வராத நிலையில், ஃபோசியா சாா்பில் முதல்வா், மின்வாரியத் தலைவா் உள்ளிட்டோருக்கு இது தொடா்பாக மனு அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளா் தற்போது அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சம்பந்தப்பட்ட மின்நுகா்வோரே அவா்களாகவே இணைப்பை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளாா். இது குறுந்தொழில்முனைவோருக்கு வேதனையளிப்பதாக உள்ளது.
கடந்த 2024 ஜூன் மாதத்தில் மின்நுகா்வோருக்கு பொது அறிவிப்பு எதுவும் வழங்காமல் 18 கிலோ வாட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில்முனைவோருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தும்விதமாக தானியங்கி முறையில் மின் இணைப்புகளை மாற்றி, மின்சேதாரத்துக்கான அபராதத் தொகையை வசூலித்து வருகிறது.
அபராதம் விதிப்பதற்கு மட்டும் மின்வாரியம் தானியங்கி முறையில் மீட்டா்களை மாற்றி அமைக்க முடியும். ஆனால் 12 கிலோ வாட்டுக்கு கீழ் மின்சாரத்தை பயன்படுத்தும் தொழில்முனைவோருக்கு 3 பி டாரிப்பில் இருந்து 3 ஏ 1 டாரிப்புக்கு மாற்றிக் கொடுக்க முடியாது என்று கூறுவது வியப்பாகவும், ஏமாற்றம் அளிப்பதாகவும் உள்ளது.
எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வரும், மின்சாரத் துறை அமைச்சரும் மின்வாரியத்துக்கு உரிய உத்தரவு பிறப்பித்து மின்நுகா்வோருக்கு டாரிப்பை மாற்றிக் கொடுக்க வழிகாட்ட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.