சென்னை சிறைக் கலவரத்தில் எரித்துக்கொல்லப்பட்ட துணை ஜெயிலருக்கு நினைவஞ்சலி!
``ஆர்.எஸ்.எஸ் பலிதானியை வைத்து வாக்குகேட்கிறார்கள்'' - காங்கிரஸில் சேர்ந்த பாஜக நிர்வாகி ஆவேசம்!
கேரள மாநில பா.ஜ.க-வின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் சந்தீப் வாரியர். பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கொள்கையில் ஊறிய குடும்பத்தைச் சேர்ந்த சந்தீப் வாரியர் கேரள மாநில பா.ஜ.க-வில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். தொலைகாட்சி விவாதங்களில் பா.ஜ.க-வின் குரலாக ஒலித்த சந்தீப் வாரியருக்கும் பா.ஜ.க மாநில நிர்வாகிகளுக்கும் கருத்துவேறுபாடு காரணமாக பனிப்போர் நிலவி வந்தது.
கடந்த சில நாள்களாக சந்தீப் வாரியர் பா.ஜ.க தலைவர்கள் மீது மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இதையடுத்து அவர் ஆளும் சி.பி.எம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் கசிந்தது. சந்தீப் வாரியர் சிறந்த தலைவர் அவர் வந்தால் ஏற்றுக்கொள்ளுவோம் என சி.பி.எம் தரப்பில் இருந்து கருத்து தெரிவிக்கப்படது. இந்த நிலையில் அவர் காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன், சட்டசபை எதிர்கட்சி தலைவர் வி.டி.சதீசன் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தொடர்ந்து செய்தியாளகளிடம் சந்தீப் வாரியர் கூறுகையில், "அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுடனும் பாகுபாடின்றி நல்லமுறையில் நட்பில் இருந்துவருகிறேன். ஒரு அமைப்பில் இணைந்து செயல்படும்போது அதில் இருப்பவர்கள் நம்மீது அக்கறையும், ஆதரவும் இருக்க வேண்டும். நான் வெறுப்பை மட்டுமே தயாரிக்கும் ஃபேக்டரியில் இருந்துகொண்டு நீண்ட காலமாக அன்பையும், கரிசனத்தையும் எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு அமைப்பின் நிர்வாகி என்ற வகையில் எனக்கு அங்கிருந்து அன்பும், கரிசனமும் கிடைக்கவில்லை.
ஏகாதிபத்திய மனநிலையில் ஜனநாயகத்தை மதிக்காத வகையில் பா.ஜ.க-வின் செயல்பாடுகள் இருந்தன. சொந்த கருத்துகளை கூற முடியாமல், மனித நேயத்துக்கு ஆதரவாக பேசும் சுதந்திரம் கூட அங்கு இல்லை.
கேரளாவில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் சேர்ந்து வாழலாம் என கூறிய ஒரே காரணத்துக்காக ஓராண்டு காலம் என்னை விலக்கிவைத்து நடவடிக்கை எடுத்தார்கள். இந்த சமூகத்தில் எனது நட்புகள், உறவுகளிடத்தில் மதத்தைத்தேடி பிரிவு ஏற்படுத்த எனக்கு எந்த விருப்பமும் கிடையாது. தனிப்பட்ட கருத்து என்று நான் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவுக்காக ஒரு ஆண்டு காலம் என்னை அமைப்பில் இருந்து விலக்கி வைத்தார்கள். அது மட்டும் அல்லாது சமூக வலைத்தளங்களிலும் என்னை விமர்சித்தார்கள். கேரளாவில் 14 மாவட்டங்களிலும் நான் சுற்றுப்பயணம் செய்து பணி செய்தேன். தொலைகாட்சி விவாதங்களிலும் கலந்து கொண்டேன். கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.க-வில் இருந்து எனக்கு கிடைத்தது தனிமைப்படுத்தலும், விமர்சனங்களும்தான். என் சக நிர்வாகிகளிடம் இருந்து சில நாள்களாக கடுமையான விமர்சனத்துக்குள்ளானேன்.
நான் மூவர்ண துண்டை தோளில் அணிந்து கொண்டு காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்திருப்பதற்கு பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரனும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும்தான் காரணம். கேரளா முதல்வர் பினராய் விஜயனுடன் பா.ஜ.க தலைவர்கள் நடத்தும் அட்ஜெஸ்ட்மெண்ட் அரசியலுக்கு எதிராக நான் பேசினேன். அதை குற்றமாக கூறி என்மீது குறை கூறுகின்றனர். வெறுப்பு தயாரிக்கும் பேக்டரியில் நான் பணி செய்தேன், இப்போது காங்கிரஸ் என்ற அன்பின் கடையில் உறுப்பினராக முடிவு செய்துவிட்டேன். இதை பார்த்துக்கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரிடம் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காக உயிர் நீத்த பலிதானியின் போட்டோவை ஒரு வேட்பாளரின் போட்டோவுடன் வைத்து ஓட்டு கேட்கும் சரித்திரம் இதுவரை இருந்ததா? பாலக்காடு இடைத்தேர்தலில் பலிதானியான ஸ்ரீனிவாசனின் புகைப்படத்தை காட்டி வாக்கு சேகரிக்கும் அளவிற்கு அமைப்பு தரம் தாழ்ந்து விட்டது." என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb