ஆஸி.யின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம்; அரையிறுதியில் விளையாடுவாரா?
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் இருந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளும், குருப் பி பிரிவில் ஆஸ்திரேலிய அணியும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன.
இதையும் படிக்க: கேப்டன் பொறுப்பிலிருந்து விலகவுள்ளதாக ஜோஸ் பட்லர் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மழையினால் கைவிடப்பட ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அந்த அணி அரையிறுதியில் இந்தியா அல்லது நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
மேத்யூ ஷார்ட்டுக்கு காயம்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடிய மேத்யூ ஷார்ட்டுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணி அதன் முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்த்து 351 ரன்களை துரத்தியபோது, மேத்யூ ஷார்ட் அபாரமாக விளையாடி 63 ரன்கள் குவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் அவர் 15 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார்.
மேத்யூ ஷார்ட் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியதாவது: மேத்யூ ஷார்ட் காயத்தால் சிரமப்படுவதாக நினைக்கிறேன். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவரால் இயல்பாக விளையாட முடியவில்லை. அரையிறுதிப் போட்டிக்கு முன்பாக அவர் குணமடைந்து அணியில் விளையாடுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அவரது இடத்தை நிரப்புவதற்கு எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள் என்றார்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் அணியை புதிதாக கட்டமைக்கும் நேரம் வந்துவிட்டது: முன்னாள் கேப்டன்
மேத்யூ ஷார்ட் அரையிறுதியில் விளையாட முடியாத பட்சத்தில், அவருக்குப் பதிலாக ஜேக் ஃபிரேசர் மெக்கர்க் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். ஆல்ரவுண்டர் ஆரோன் ஹார்டி மற்றும் மாற்று வீரர் கூப்பர் கன்னோலியும் மேத்யூ ஷார்ட்டுக்குப் பதிலாக களமிறங்க தயாராக இருக்கிறார்கள்.