இதயத் துடிப்பை நிறுத்திய 4 மாத கரு - ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம்
வேலூர் அருகே வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்று, அவரை ஓடும் ரயிலில் இருந்தும் கீழே தள்ளிய சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.
கை உடைந்து, கால் முறிந்து, தலையில் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட அந்த கர்ப்பிணி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ஹேமராஜ் என்ற இளைஞன் ரயில்வே போலீஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறான். அவன் மீது கொலை முயற்சி, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கோடு சேர்த்து, ஏற்கெனவே கொலை உட்பட பெண்களுக்கெதிரான மூன்று பெருங்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஹேமராஜ்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/e3phndjs/WhatsApp_Image_2025_02_07_at_2_32_47_PM.jpeg)
இந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை நேற்று கண்ணீரோடு விவரிக்கும் வீடியோவும் வெளியாகி, நெஞ்சை உறைய செய்தது. ``என் வயித்துல குழந்தை இருக்கு. உனக்கும் அக்கா, தங்கச்சிங்க இருப்பாங்க. தயவு செஞ்சி என்னை விட்டுடு தம்பி’னு அவன்கிட்ட அரைமணி நேரம் போராடுனேன். எனக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது.
இந்த சைகோவை வெளிய விடாதீங்க. மக்கள் கொடுக்கச் சொல்லும் தண்டனையைக் கொடுங்க. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமல் போய்டுச்சி’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து, மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பாதிக்கப்பட்ட பெண்ணை நேற்று இரவு நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து, அவருக்குத் தேவையான சிகிச்சைகளை வழங்குவதாகவும் உறுதியளித்து சென்றார்.
``வயிற்றிலுள்ள குழந்தையும் பத்திரமாக இருக்கிறது’’ என மருத்துவர்கள் சொன்னதாகவும் மகளிர் ஆணையத் தலைவர் கூறியிருந்தார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/wpy40pqv/WhatsApp_Image_2025_02_07_at_2_32_47_PM_1.jpeg)
இந்த நிலையில், 4 மாத கருவில் இதயத் துடிப்பு நின்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கின்றன. இன்று காலை வரை கருவில் இதயத் துடிப்பு இருந்ததாகவும், மதியம் 12.30 மணிக்குப் பிறகே இதயத் துடிப்பு நின்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கலைந்த கருவை அகற்றுவதற்காக மருத்துவ குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவல் சோகத்திலும் பெரும் சோகமாக அனைவரையும் கலங்க வைத்துள்ளது.