நியூசி. வேகப் பந்துவீச்சாளருக்கு காயம்; சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா?
மனைவியுடன் பழகுவதைக் கண்டித்த கணவன் கொலை; -ரோட்டில் அரிவாளுடன் குரூப் டான்ஸ் ஆடிய கொலையாளிகள்...
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகிலுள்ள அமுதுண்ணாக்குடியைச் சேர்ந்தவர் சந்துரு. கட்டிடத் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த பேச்சியப்பன் என்பவருடன் தினமும் வேலைக்குச் செல்வது வழக்கம். இந்த நிலையில் வேலைக்குச் சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் கூலி வாங்குவதற்காக பேச்சியப்பனிடம் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது திடீரென 2 பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், சந்துருவை வெட்ட முயன்றுள்ளனர். இதனால், பயந்து போன சந்துரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்டார். பேச்சியப்பன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கொலை வெறியில் இருந்த அந்த கும்பல் சந்துருவின் வீடு புகுந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/3fh4oadu/IMG-20250208-WA0002.jpg)
இதில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், சந்துரு அருகிலுள்ள தச்சுமொழியைச் சேர்ந்த சுபா என்பவரை கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையில் 6 மாதத்தில் சுபா, கணவரை பிரிந்து தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். பின்னர், அவர் சென்னையில் வேலைக்குச் சென்ற போது சாத்தான்குளத்தைச் சேர்ந்த கிங்ஸ்டன் ஜெயசிங் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த சந்துரு, தன் மனைவியையும் கிஸ்டனையும் போனில் கண்டித்துள்ளார். இதில், சந்துருவுக்கும் கிங்ஸ்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிங்ஸ்டன் ஜெயசிங் சாத்தான்குளத்திற்கு திரும்ப வந்துள்ளார். இந்த நிலையில்தான் சந்துரு பேச்சியப்பனுடன் பேசிக் கொண்டிருந்த போது கிங்ஸ்டன் ஜெயசிங், தன் நண்பர்களான மகாராஜா, லிங்கதுரை மற்றும் 17 வயதுடைய 2 சிறார்களுடன் சந்துருவை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். 17 வயதுடைய 2 சிறார்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-08/qhsk6f9e/IMG-20250208-WA0003.jpg)
மற்ற 3 பேரும் பேரூரணியில் உள்ள மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட கிங்ஸ்டன் மீது ஏற்கெனவே 2 கொலை வழக்கும், அடிதடி வழக்கும் நிலுவையில் உள்ளது. சாத்தான்குளம் காவல் நிலைய ரவுடிகள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது. சந்துருவை வெட்டிக் கொலை செய்த 5 பேரும் 2 பைக்குகளில் அரிவாளுடன் சாலையில் வேகமாக சென்றவர்கள், பைக்கை சாலையின் நடுவில் நிறுத்திவிட்டு அரிவாளுடன் நடனமாடியுள்ளனர். இந்த காட்சியை அப்பகுதியில் நின்றிருந்த சிலர், அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.