இதயம் வடிவில் புயல் சின்னம்.. கிறிஸ்துமஸ் நாளில் மழை பெய்யுமா?
வங்கக் கடலில் உருவாகி ஆந்திரம் வரை சென்று யு டர்ன் போட்டுவிட்டு மீண்டும் தமிழகம் வந்திருக்கும் புயல் சின்னம், இதயம் வடிவில் காட்சியளிக்கிறது.
நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று காலை முதலே லேசான தூறல் போட்டபடி உள்ளது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், நேற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திர - வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், தெற்கு ஆந்திர - வ தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் வலுவிழக்கக் கூடும்.
இதனால், இன்று வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இதர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ் நாளில்.. வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்ப்பட்டுள்ளது.
சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.