இதெல்லாம் நடக்குமெனத் தெரியாது..! அஸ்வின் பகிர்ந்த அழைப்புகள் விவரம்!
ஓய்வை அறிவித்த அஸ்வின் தனக்கு யாரெல்லாம் செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்ற விவரத்தை பகிர்ந்துள்ளார். அதில் சச்சின், கபில் தேவ் பெயர்கள் இருக்கின்றன.
38 வயதாகும் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிஸ்பேன் டெஸ்ட்டின் 5ஆம் நாளில் தெரிவித்தார்.
இதுவரை டெஸ்ட்டில் மட்டும் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பெர்த் டெஸ்ட்டில் தேர்வு செய்யாததால் ஓய்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
முன்னாள் இந்திய வீரர்கள் உள்பட பலரும் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விவரங்களைப் பதிவிட்டு அஸ்வின் கூறியதாவது:
25 வருடங்களுக்கு முன்பு என்னிடம் செல்போன் இருக்கும் என்றும் எனது கிரிக்கெட் வாழ்வின் கடைசிநாளில் இப்படியான அழைப்புகள் வருமென்றும் யாராவது கூறியிருந்தால் அன்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும். சச்சின், கபில்தேவ்-க்கு நன்றி. ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.