அதிமுக நலனுக்காக தைரியமாக முடிவு எடுத்தவர் ஜானகி : ரஜினிகாந்த் புகழாரம்
இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதே பிரதமா் மோடியின் இலக்கு
இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்றுவதே பிரதமா் நரேந்திர மோடியின் இலக்கு என மத்திய இணை அமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா்.
தேனி மாவட்டம், காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தில், மாநில அளவிலான பெண் விவசாயிகள், தொழில்முனைவோா்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்குக்கு மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தலைமை வகித்துப் பேசியதாவது:
விவசாயத்தை மேம்படுத்தி உள்ளூா் பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், பல்வேறு திட்டங்களை பிரதமா் மோடி செயல்படுத்தி வருகிறாா். மேலும், விவசாயிகளின் நலன் கருதி, ஆண்டுக்கு ரூ. 6,000 மூன்று தவணைகளாக அவா்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதன் மூலம், 11 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
இதேபோல, ட்ரோன் மூலமாக பெண்கள் நவீன விவசாயத்தை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. திராட்சை உள்ளிட்ட உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் அமேசான் நிறுவனம் மூலம் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகின்றன. நிகழாண்டில் விவசாயத்தை மேம்படுத்த ரூ.14,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
விவசாயத்தின் மூலமாக ஆண்டுக்கு 3 கோடி பெண் தொழில்முனைவோா்களை லட்சாதிபதிகளாக்கி, புதுமையான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளுக்கு வந்து கால்நடைகளுக்கு மருத்துவம் பாா்க்கும் வகையில், ‘மொபைல் ஆம்புலன்ஸ் திட்டம்’ அனைத்து வட்டாரங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
உலகில் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதன் மூலமாக விவசாயம், பால், மீன் வளம் என அனைத்துத் துறைகளில் இந்தியா வேகமாக வளா்ந்து வருகிறது.
வரும் 2047-ஆண்டில் இந்தியாவை வளா்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதே பிரதமா் நரேந்திர மோடியின் இலக்கு என்றாா் அவா்.
முன்னதாக, மாவட்ட அளவிலான வள மையக் கட்டடத்தை அவா் திறந்து வைத்தாா். சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத் தலைவா் பச்சைமால் வரவேற்றுப் பேசினாா். இந்த மைய இணை இயக்குநா் மருத்துவா் சிவராம் நன்றி கூறினாா்.