"எளியவர்களுக்கு உணவு எட்டாக்கனியாகக் கூடாது" - தாயின் பெயரில் அன்னதான விருந்து த...
"இந்திராகாந்தி - பண்டாரநாயக்கா ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த லாயக்கற்ற பாஜக அரசு" - வேல்முருகன்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், 'மீனவர்களின் விசைப்படகுகளும், பின்னால் இருக்கும் அவலங்களும்' என்ற தலைப்பில் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கடல் வழியாகப் பயணம் செய்து கலந்து கொண்டார். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்,
"தமிழ்நாடு மீனவர்கள் கண்ணீர் கடலில் மிதக்கின்ற துடிப்பில்லாத படகு போல் வாழ்நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பிரச்னைக்குத் தீர்வு காணக்கூடிய அனைத்து அதிகாரத்தையும் வல்லமையும் படைத்துள்ள மத்திய அரசு இதுவரை இந்த மக்களுக்கான நிரந்தர தீர்வைக் காட்டுவதற்கான எந்த ஒரு பூர்வாங்க பணிகளையும் சுதந்திர இந்தியாவில் செய்யவில்லை.
இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தாலும் மீனவர்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. 1974 -ம் ஆண்டு இந்திராகாந்தி - பண்டாரநாயக்கா போட்ட ஒப்பந்தத்தைக் கூட நடைமுறைப்படுத்தாத லாயக்கற்ற அரசாக மத்திய பா.ஜ.க அரசு இருக்கிறது. மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யும் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுகிறது. இதனை, இந்தியா - இலங்கை பேச்சு வார்த்தையின் அடிப்படையில் தடுக்க வேண்டும்.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் போன்ற அண்டை நாடுகளோடு இருப்பதைப் போன்று பாதிப்பில்லாத பூர்வாங்க ஒப்பந்தத்தை இலங்கையோடு மத்திய அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். இந்தியக் கடற்படை தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது போல் தாக்குவதை அனுமதிக்கக் கூடாது.
தமிழ்நாடு மீனவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு என்ன கோரிக்கை என்பதைக் கேட்டு அறிந்து அவர்களது கோரிக்கைக்குச் செவி சாய்த்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருப்பவர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி கச்சத்தீவை மீட்போம் என்று கூறுகிறார்கள்.
கச்சத்தீவை மீட்பது இரண்டாவதாக இருக்கட்டும். இந்திரா காந்தி இறக்கும்போது கச்சத்தீவில் மீனவர்களுக்கான உரிமையாக கச்சத்தீவில் மீன் வலைகளை உலர்த்திக் கொள்வது, ஓய்வெடுக்கும் உரிமை போன்ற அடிப்படை உரிமைகளை இந்திய அரசு தமிழ்நாடு மீனவர்களுக்குப் பெற்றுத் தர வேண்டும்.
அனுராக என்கின்ற இலங்கை அதிபர் கச்சத்தீவில் இறங்கி, 'ஒரு காலத்திலும் யாருக்கும் கச்சத்தீவை விட்டுத் தர அனுமதிக்க மாட்டோம். கச்சத்தீவைத் திரும்பித் தர மாட்டோம்' என்று இறுமாப்போடு கொக்கரித்துப் பேசுகிறார். இதற்கு இந்திய அரசிடமிருந்து மீனவர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு கண்டனம் கூட எழவில்லை. இதையெல்லாம் எண்ணுகின்ற போது மீனவர்கள் இந்திய நாட்டின் குடிகள் தானே... இவர்களைக் காப்பாற்ற ஏன் மத்திய அரசு மறுக்கிறது?

மீனவர்களுக்கென்று தனியாக அமைச்சகம் உருவாக்குவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். ஆனால், தனி மீனவ அமைச்சகம் உருவாக்கவில்லை. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு மீனவர்கள் கொல்லப்படவில்லையா? படகுகள் பறிமுதல் செய்யப்படவில்லையா? இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மீனவ சமுதாய மக்களிடம் இருக்கின்றன.
இதற்கான விடையை ஒன்றிய, மாநில அரசுகள் கண்டுபிடித்து நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும். தற்போது, நான் போராட்டத்திற்கு வருவது கூட யாரும் எனக்கு படகு தரக்கூடாது என்று காவல்துறை, உளவுத்துறை அவர்களை மிரட்டியுள்ளது. அப்புறம் எப்படி மிகப்பெரிய போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுப்பார்கள்?
ஜல்லிக்கட்டை மீட்டெடுக்க போராட்டம் மிகப்பெரிய அளவு நடைபெற்றது. அதேபோல், மீனவர்களைப் பாதுகாக்க போராட்டத்தில் ஈடுபடுவதை அரசு தடுக்கிறது. தமிழ்நாட்டுப் படகுகளை உடைத்து ஏலம் விடும் இலங்கை அரசைத் தடுக்க திறனற்ற லாயக்கற்ற அரசாக மத்திய அரசிருக்கிறது. அமெரிக்க வரிவிதிப்பால் மீன் ஏற்றுமதி மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் மீன் பொருட்கள் பல கண்டய்னர்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் மீனவர்களிடம் மிகக் குறைந்த விலையில் அடிமாட்டு விலைக்கு மீன் உள்ளிட்ட பொருட்களைக் கேட்கின்றனர். சில இடங்களில் குறைவான விலைக்குக் கூட அந்த மீன்களை வாங்குவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகிறது. அதனால், மீண்டும் கடலில் கொட்டக்கூடிய நிலையும் இருக்கிறது. எனவே, இதற்கு உடனடியாக ஒரு முடிவைக் கொண்டு வந்து அமெரிக்க அரசோடு இந்திய அரசு பிரதமர் மோடி வெளியுறவுத்துறை விரைவில் பேசி சுமுக தீர்வை எட்ட வேண்டும்.

மீனவர்களுக்கு மட்டுமல்ல இந்தப் பிரச்னை, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கைத்தறி நெசவுத் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துன்பத்திலும் துயரத்திலும் இருக்கின்றனர். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வை மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்றார்.