விஜய் சுற்றுப்பயணம்: "நானும், விஜயகாந்த்தும் இத எப்பவோ பாத்துட்டோம்" - சரத்குமார...
மகாராஷ்டிரா தேர்தல்: உத்தவ் - ராஜ் தாக்கரே கூட்டணி? கலக்கத்தில் காங்கிரஸ்; உத்தவ் சொல்வது என்ன?
மகாராஷ்டிராவில் வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் மேயர் மாநகராட்சி உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் உத்தவ் தாக்கரேயும், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைத்துப் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக இரண்டு தலைவர்களும் கடந்த சில மாதங்களில் மூன்று முறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். சமீபத்தில் உத்தவ் தாக்கரே நேரடியாக ராஜ் தாக்கரே இல்லத்திற்குச் சென்று ராஜ் தாக்கரேயுடன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாகப் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்துள்ளார்.
இதில் இரு தலைவர்களும் மும்பை, நாசிக் போன்ற மாநகராட்சிகளில் எத்தனை வார்டுகளில் போட்டியிடுவது என்பது குறித்துப் பேசியதாகத் தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராஜ் தாக்கரேயுடனான கூட்டணியை விரைவில் அறிவிக்கப்போவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில், ''ராஜ் தாக்கரேயுடனான கூட்டணி குறித்து விரைவில் சரியான நேரத்தில் அறிவிப்பேன்.
பிரதமர் நரேந்திர மோடி வேண்டுமானால் என்னை விரோதியாக நினைக்கலாம். ஆனால் நான் அவரை விரோதியாக நினைக்கவில்லை. ஆனால் அவர் சிவசேனாவை அழிக்க முயற்சிக்கும் அரசியலை எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது.
அவர் மனதில் தவறான எண்ணம் இருந்தாலும், அவர் மீதமுள்ள பதவிக் காலத்தில் நல்ல பணிகளைச் செய்ய நான் அவரை வாழ்த்துகிறேன். பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று உத்தவ் கூறினார்.
தசரா பொதுக்கூட்டத்தில் ராஜ் தாக்கரே கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு உத்தவ் தாக்கரே பதிலளிக்கவில்லை. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் கூட்டணி அமைக்கும்பட்சத்தில் அது காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவாக அமையும். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் உத்தவ் தாக்கரே இருக்கிறார்.
தாக்கரே சகோதரர்கள் இணையும் போது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைக்கும் வார்டுகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது. ராஜ் தாக்கரேயும், உத்தவ் தாக்கரேயும் கடந்த 20 ஆண்டுகளாக அரசியல் ரீதியாகப் பிரிந்து இருந்தனர். இருவரும் பெரியப்பா மற்றும் சித்தப்பா மகன்கள் ஆவர்.