கோலியைப் பின்னுக்குத் தள்ளிய 21-ம் நூற்றாண்டின் அதிவேக வீராங்கனை; 37 வருட சாதனைய...
`இப்போதுகூட வேகமாக நடக்கவில்லை'- கொள்முதல் அலட்சியம்; தேங்கிக் கிடக்கும் நெல்; துயரில் விவசாயிகள்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். குறித்த நேரத்தில் மேட்டூர் திறக்கப்பட்டது, போதுமான அளவில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைத்தது, நன்கு விளைச்சல் தரக்கூடிய திருப்பதி 5 ரகத்தை பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டது இப்படி பல காரணங்களால் இந்த முறை அமோக விளைச்சல் கண்டது. இந்நிலையில் ஆகஸ்ட் இறுதியிலிருந்தே அறுவடைப் பணிகளை விவசாயிகள் தொடங்கிவிட்டனர். செப்டம்பர் 1ம் தேதியிலிருந்து கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.

அறுவடை அதிகரித்தது, அதேபோல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல்லின் அளவும் அதிகரித்தது. ஆனால் அதற்கேற்ற வகையில் விரைந்து கொள்முதல் செய்வதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்யவில்லை என்கிறார்கள் விவசாயிகள். சாக்கு, சணல் போன்றவை பற்றாக்குறை, லாரி தட்டுப்பாடு ஆகியவற்றால் கொள்முதல் பெருமளவில் பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே சேமிப்புக் கிடங்குகளில் நெல் மூட்டைகள் தேங்கியிருந்ததால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கின. இதனால் நெல் மூட்டைகள் அடுக்க இடம் இல்லாமல் கொள்முதல் பணிகளும் முடங்கின.
இந்த சூழலில் நெல்லுடன் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன் அறுவடை செய்த நெல்லை சாலையில் போட்டுக் காத்திருந்தனர். இதனால் கொள்முதல் நிலையங்கள், சாலையோரங்கள் என எங்கும் குவியல் குவியலாக நெல் கொட்டிவைக்கப்பட்டது. நெல் கொள்முதல் முடங்கியதால் பல இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் பெய்த மழையில் நெல் நனைந்து முளைத்தது. "மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி அனுப்பாததால் அரவை பாதிக்கப்பட்டது. இதுவே கொள்முதல் தேக்கத்திற்குக் காரணம்" என்கிறார் அமைச்சர் சக்கரபாணி. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "நெல் கொள்முதலில் தமிழக அரசு தோல்வியடைந்துவிட்டது" என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறார். அன்புமணி, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கொள்முதல் தேக்கம் குறித்துப் பேசி வருகின்றனர்.

ஆனாலும் டெல்டாவில் இப்போது வரை நிலைமை மாறவில்லை. கொள்முதல் வேகம் எடுக்கவில்லை. கொள்முதல் நிலையங்கள், சாலையோரங்களில் நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. அறுவடை செய்த நெல், அறுவடை செய்யாத நெற்பயிர் ஆகியவை மழையில் நனைந்து முளைத்துவிட்டன. இதுகுறித்து வழக்கறிஞரும், விவசாயியுமான ஜீவக்குமார் கூறுகையில், ``இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிக பரப்பளவில் செய்யப்பட்டதும், விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதும் முன் கூட்டியே தெரிந்ததுதான். ஆனாலும் தமிழக அரசு முன்கூட்டியே கொல்முதலுக்கான ஏற்பாட்டை கவனமுடன் செய்யவில்லை. இதில் மெத்தனமாகவே செயல்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 15 வரை 3 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த ஆண்டு 9 லட்சம் மெட்ரிக் டன் செய்துள்ளனர். இன்னும் சுமார் 50,000 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் கொள்முதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டது. மழை உள்ளிட்டவை தொடங்குவதற்கு முன்பே ஈரப்பதம் ஆய்வு செய்வதற்கு கண்காணிப்பு குழு அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 19ம் தேதி தான் முதல்வர் ஸ்டாலின், ஈரப்பதத்தை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். கொள்முதலுக்கு தேவையான சாக்கு, சணல், தார்பாய் போன்றவை வாங்குவதில் அரசு மெத்தனமாக செயல்பட்டது. சேமிப்புக் கிடங்குகள் காலியாக இல்லாததால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலேயே தேங்கின. கொள்முதல் செய்யாததால் தேங்கியிருந்த நெல் மழையில் நனைந்து முளைத்து பாதிப்படைந்தன.

சாகுபடிக்கு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30,000 வரை செலவு செய்துள்ளனர். ஆனால் கொள்முதலில் ஏற்பட்ட முடக்கம் அறுவடை செய்த நெல் மற்றும் அறுவடை செய்யாமல் இருந்த நெற்பயிர் மழையில் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதில் தாமதம் செய்ததால் கொள்முதல் பாதிக்கப்பட்டதாகக் கூறி அமைச்சர்கள் இதனை மடைமாற்றுகின்றனர். முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து முறையாக கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளை பாதுகாக்கவேண்டும் என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறுகையில், "காட்டூர், ஈச்சங்கோட்டை, ஒரத்தநாடு புதூர், ஒக்கநாடு கீழையூர், தென்னமநாடு உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன. கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்ட கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்துவிட்டன. மன்னார்குடி அருகே பல கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் முளைத்துவிட்டன. விவசாயிகள் நெல் போட முடியாமல் மழையில் நனைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போல் தஞ்சாவூர் ஆலக்குடியில் மட்டும், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் சுமார் 100 ஏக்கருக்கு மேல் மழை நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. அம்மாப்பேட்டை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் கொரடாசேரி உள்ளிட்ட பல பகுதிகள் மற்றும் நாகையிலும் நெற்பயிர் மூழ்கியுள்ளன. அரசு கொள்முதல் செய்வதில் ஏற்பட்ட தாமதமே இதற்குக் காரணம். அரசு முன்கூட்டியே திட்டமிட்டிருந்தால் இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதும் கூட கொள்முதல் வேகமாக நடக்கவில்லை என்பது வேதனை கலந்த உண்மை" என்றார். அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் விரைந்து எடுக்கப்படுகின்றன. விவசாயிகளிடம் விரைந்து கொள்முதல் செய்யப்படுகிறது" என்றார்.