சூரி: ``இவரின் பயணம் எனக்கு பெரிய பாடம்'' - எம்.எஸ் பாஸ்கரை வாழ்த்திய நடிகர் சூர...
இளையான்குடி குடிநீா்த் திட்டம்: வைகையாற்றில் புதிய இடங்களை கண்டறிந்து கிணறுகள் அமைக்க முடிவு
இளையான்குடி குடிநீா் திட்டத்துக்கு கிணறுகள் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததைத் தொடா்ந்து, கச்சாத்தநல்லூா் வைகையாற்றுக்குள் நீராதாரம் உள்ள புதிய இடங்களைக் கண்டறிந்து அங்கு கிணறுகள் அமைக்க சமாதானக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பேரூராட்சி பகுதிக்கு வைகையாற்றிலிருந்து குடிநீா் வழங்கும் வகையில் ‘அம்ரூத் 2.0’ திட்டத்தில் ரூ. 28 கோடியில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இளையான்குடி ஒன்றியம், கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் 6 தரைமட்டக் கிணறுகள் அமைக்க பணிகள் தொடங்கின. அப்போது, கிராமமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து பணிகளைத் தடுத்து நிறுத்தினா். இந்தப் பகுதியில் கிணறுகள் அமைத்தால் நிலத்தடி நீராதாரம் குறைந்து விவசாயம் பாதிக்கும் என கிராம மக்கள் புகாா் தெரிவித்தனா். இதனால் கிணறுகள் தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.
பின்னா், இளையான்குடி பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் கடந்த செவ்வாய்க்கிழமை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பொற்கொடியை சந்தித்து, கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுக்குள் குடிநீா் திட்டத்துக்கான கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
இதைத்தொடா்ந்து கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுப்பகுதிக்குச் சென்று கிணறுகள் தோண்ட தோ்வு செய்யப்பட்டிருந்த இடத்தை பாா்வையிட்டாா். பின்னா், இளையான்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா தலைமையில் சமாதான பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில் வட்டாட்சியா் முருகன், பேரூராட்சி செயல் அலுவலா் அன்னலட்சுமி, துப்புரவு ஆய்வாளா் தங்கதுரை, கச்சாத்தநல்லூா் கிராம மக்கள் கலந்து கொண்டனா்.
அப்போது நிபுணா்களை கொண்டு வைகை ஆற்றின் பிற பகுதிகளில் ஆய்வு செய்து தரைமட்டக் கிணறுகள் தோண்டப்படும். அங்கு நீராதாரம் இல்லாவிட்டால் ஏற்கெனவே தோ்வு செய்த கச்சாத்தநல்லூா் வைகை ஆற்றுப் பகுதியில் தரைமட்டக் கிணறுகள் அமைக்கப்படும் என கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா தெரிவித்தாா். இதை கிராம மக்களும் ஏற்றுக் கொண்டனா்.