H1B visa பிரச்னை: `அமெரிக்கா போனால் போகட்டும்' - இந்தியர்களை வரவேற்கும் சீனா, ஜெர்மனி
இனி ஹெச்-1பி விசா மூலம் அமெரிக்கா வருபவர்களுக்கான தொகை 1 லட்சம் டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.88 லட்சம்) - இது கடந்த 21-ம் தேதி முதல் அமெரிக்க அரசு அமல்படுத்திய அதிரடி உத்தரவு.
பொதுவாக, ஹெச்-1பி விசா மூலம் பிற நாட்டை சேர்ந்த அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங், கணிதம் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் அமெரிக்காவிற்கு செல்வார்கள்.

இந்த விசா மூலம் அமெரிக்காவிற்கு அதிகம் செல்லும் டாப் இரண்டு நாடுகள் இந்தியா (67 சதவிகிதம்), சீனா (11 சதவிகிதம்).
அமெரிக்காவின் இந்தப் புதிய நடைமுறையால் ஏகப்பட்ட இந்திய இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஒரு சில நாடுகள் ஸ்கோர் செய்ய நினைக்கின்றன. இந்திய இளைஞர்களைத் தங்களது நாட்டின் பக்கம் இழுக்க விரும்புகின்றனர்.
இதில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள நாடு சீனா.
அமெரிக்கா `H1B visa'-க்கு கட்டணத்தை உயர்த்திய அடுத்த நாளே, சீனா `K visa' என்கிற புதிய விசா நடைமுறையை அறிமுகப்படுத்தியது.
K visa என்றால் என்ன?
இது அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினீயரிங் மற்றும் கணிதம் பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் சீன விசா ஆகும். இந்த விசாவை பெற இந்தத் துறைகளில் குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள் வயது, கல்வி மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சீனா வழங்கும் பிற விசாக்களை விட, இந்த விசாவிற்கு கூடுதல் வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

நேரடியாகவே அழைக்கும் ஜெர்மனி
சீனாவாவது சுற்றி வளைத்து அனைத்து நாட்டு இளைஞர்களுக்கும் விசா என்கிறது.
ஆனால், இந்தியாவின் ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மன் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திறன் பெற்ற அனைத்து இந்தியர்களுக்கு இதோ என் அழைப்பு. ஐ.டி, மேனேஜ்மென்ட், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இந்தியர்களுக்கான சிறந்த வேலைவாய்ப்பிலும், தனது நிலையான குடியேற்ற கொள்கைகளாலும் ஜெர்மனி தனித்து நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
அடுத்தது, நியூசிலாந்து
நியூசிலாந்தும் இதுவரை இருந்த திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவில் (SMC) இருந்த குடியிருப்பு விசா நடைமுறைகளைத் தளர்த்தி, புதிய மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது.
> அதாவது, 1 - 3 நிலையிலான திறன் பணிகளில் இருப்பவர்கள் இரண்டு ஆண்டுகள் நியூசிலாந்தில் இருந்தது உள்பட ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நியூசிலாந்தின் சராசரி சம்பளத்தைத் தாண்டி, 1.1 மடங்கு உயர்வாக சம்பாதிக்க வேண்டும்.

> வர்த்தகம் மற்றும் டெக்னிக்கல் துறைகளில் பணிபுரிபவர்கள் நிலை 4 அல்லது உயர்கல்வி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு 18 மாதம் நியூசிலாந்தில் இருந்தது உள்பட நான்கு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும். அவர்கள் குறைந்தபட்சம் நியூசிலாந்தின் சராசரி சம்பளம் அளவிற்காவது சம்பாதிக்க வேண்டும்.
இந்த இரு பிரிவினருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் குடியிருப்பு விசா வழங்கப்பட உள்ளது.
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடுகளும் புதிய விசாக்களை அறிமுகப்படுத்துகிறது அல்லது ஏற்கெனவே இருக்கும் நடைமுறைகளைத் தளர்த்துகிறது.
இது அனைத்துமே திறன் வாய்ந்த இந்தியர்களுக்கான சிறந்த வாய்ப்புகள் தான்.