இவர்தான் இங்கிலாந்தின் ஆஷஸ் நாயகன்; வேகப் பந்துவீச்சாளரை ஆதரிக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கிய ஆயுதமாக இருப்பார் என பிரபல வேகப் பந்துவீச்சாளருக்கு ஆதரவாக ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிக்கொள்ளும் மிக முக்கியமான தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஷஸ் தொடருக்கான மிகுந்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருக்கும். ஆஷஸ் தொடர் அடுத்த ஆண்டு நவம்பரில் தொடங்குகிறது. நவம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது 2026 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையும் படிக்க: பெர்த் ஆடுகளம் யாருக்கு சாதகமானது? இந்தியாவை எச்சரிக்கும் ஆடுகள சீரமைப்பாளர்!
முக்கியமான ஆயுதம்
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் முக்கியமான ஆயுதமாக பிரபல வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் இருப்பார் என அவருக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு ஆலோசகர் ஜேம்ஸ் ஆண்டர்சன் பேசியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரை முழு உடல் தகுதியுடன் வைத்துக் கொள்ளும் பட்சத்தில், ஆஷஸ் தொடரை கண்டிப்பாக வெல்ல முடியும். அவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது மட்டுமே அவரது முக்கியமான கவலையாக இருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு தனது உடல் ஒத்துழைக்குமா என்ற பயம் அவருக்கு இருக்கிறது. ஆனால், அவர் கடினமாக உழைத்து உடலை முழுத் தகுதியுடன் வைத்திருக்கும் பட்சத்தில், இங்கிலாந்து அணிக்கு அவர் மிகவும் முக்கியமான வீரராக இருப்பார். அவர் மட்டுமல்லாது, இங்கிலாந்து அணியில் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், பிரைடான் கார்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் போன்ற பல முக்கிய பந்துவீச்சாளர்களும் இருக்கின்றனர் என்றார்.
இதையும் படிக்க: பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை அனுப்பாதீர்கள்: முன்னாள் இந்திய வீரர்
கடந்த 2021 ஆம் ஆண்டு கடைசியாக ஜோஃப்ரா ஆர்ச்சர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.