இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைமை செய்தித் தொடர்பாளர் கொலை!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் தலைமை செய்தித் தொடர்பாளர் முகமது அய்ப் கொல்லப்பட்டார்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக தெற்கு பெய்ரூட் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா நிலைக்குழு முகாம்கள் உள்ள இடங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மூன்று நகரங்களைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பெய்ரூட்டில் உள்ள ரஸ் அல் நபா பகுதியில் இஸ்ரேல் இன்று (நவ. 17) அதிரடி வான்வழி தாக்குதல் மேற்கொண்டது. இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் செய்தித்தொடர்பாளர் முகமது அஃபீப் கொல்லப்பட்டார்.
பெய்ரூட்டைச் சுற்றி நடத்தும் ஒவ்வொரு தாக்குதலின்போதும், முன்பே தாக்குதல் நடத்தும் இடங்களைச் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்ற இஸ்ரேல் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்படும். ஆனால், இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன்பு அவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் இருந்தவர்கள் கொல்லப்பட்டனர்.
பாலஸ்தீன ஆதரவு பெற்ற ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையிலான போர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் நீடித்து வருகிறது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... அரசு மருத்துவமனைகளின் இன்னொரு பக்கம்!