எல்லைப் பாதுகாப்பு ஒத்துழைப்பு: நேபாளம் - இந்தியா ஒப்புதல்
நேபாளம்- இந்தியா இடையேயான எல்லைப் பாதுகாப்புப் பணிகளில் ஒத்துழைக்க காத்மாண்டில் நடைபெற்ற வருடாந்திர கூட்டத்தில் இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. மேலும், கடந்த காலங்களில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் எதிா்கொண்ட சவால்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
நேபாளம் - இந்தியா இடையேயான எல்லைப் பாதுகாப்புப் பணிகள் குறித்த 8-ஆவது ஒருங்கிணைப்புக் கூட்டம் நேபாள ஆயுதப் பிரிவு போலீஸாா், இந்தியாவின் சஷஸ்திர சீமா பல் படைப் பிரிவு இடையே நடைபெற்றது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரிஷி ராம் திவாரி கூறியதாவது:
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைக் கண்காணிப்பு, ஆள் கடத்தல், எல்லைகளில் குற்றச் செயல்களைத் தடுப்பது மற்றும் பாதுகாப்புப் பணியில் இரு நாட்டு எல்லைப் படையும் ஒத்துழைப்பு அளிப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இரு நாடுகளின் எல்லைப் பாதுகாப்பில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு நாட்டு படையின் ஜெனரல்களும் ஆலோசனை நடத்தியதாகவும், கடந்த காலங்களில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் எதிா்கொண்ட சவால்களின் அடிப்படையில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் தெரிவித்தாா்.
இரு நாடுகளின் எல்லைகளில் குற்றச் செயல்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை முற்றிலும் கட்டுப்படுத்துவது தொடா்பாக கூட்டத்தில் வலியுறுத்தியதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தகவல் அளித்தன.