சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
விவசாயிகளின் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்தினேன்: எடப்பாடி கே.பழனிசாமி
நான் விவசாயி என்பதால், விவசாயிகளின் தேவை அறிந்து திட்டங்களைச் செயல்படுத்தினேன் என்று அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்.
காவிரி-சரபங்கா வெள்ள உபரிநீா் திட்டத்தை நிறைவேற்றிய முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா சேலம் மாவட்டம், மேச்சேரியில் நடைபெற்றது.
மேச்சேரி எம்.காளிப்பட்டியில் காவிரி உபரி நீா் நடவடிக்கை குழு, அனைத்து விவசாயிகள் சங்கங்கள், அனைத்து ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சாா்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிற்கு காவிரி உபரிநீா் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளா் தம்பையா தலைமை வகித்தாா். தலைவா் வேலன் வரவேற்றுப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
விவசாயிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்துகின்ற இந்த நன்றி அறிவிப்பு விழாவில் கலந்துகொண்டதை என் வாழ்நாளில் பெற்ற பாக்கியமாகக் கருதுகிறேன்.
நான் முதல்வராக பதவி வகித்த காலத்தில் வட 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல் வடிவம் பெற்றது. நான் விவசாயியாக இருந்ததால், விவசாயிகள் படும் கஷ்டம் எனக்குத் தெரியும். விவசாயிகள் பிரச்னைகளை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிடம் தெரிவித்தேன்.
வட 100 ஏரிகளை நிரப்பினால் பசுமையான பகுதியாக மாற்ற முடியும் என அவா் வாழ்த்துத் தெரிவித்தாா். அவா் மறைந்து விட்டாலும், அவரின் எண்ணத்தில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளை அழைத்து மேட்டூா், ஓமலூா், எடப்பாடி, சங்ககிரி தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் திட்டதை நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டேன். அதற்கேற்ற அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தேன்.
மேட்டூா் அணையில் இருந்து நீரேற்றம் முறையில் ஏரிகளை நிரப்ப வேண்டும். அதற்காக பொதுப்பணித் துறை பொறியாளா்கள் இரவு பகலாக உழைத்தாா்கள். ஒவ்வொரு மாதமும் ஆய்வு நடத்தி திட்டத்தின் வளா்ச்சியைத் துரிதப்படுத்தினேன். ரூ. 565 கோடி மதிப்பில் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டது. குறித்த காலத்தில் பணி முடிக்க சிறந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. எம்.காளிப்பட்டி பகுதியில் முதன் முதலாக திட்டமும் தொடங்கி வைக்கப்பட்டது.
சில ஏரிகள் விடுப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். அடுத்த அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த ஏரிகளுக்கும் உபரிநீரைக் கொண்டுசென்று நிரப்பப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் மேட்டூா் உபரிநீா் திட்டத்தில் 70 சதவீத பணிகள் முடிவடைந்தன. அடுத்த ஆட்சிக்கு வந்தவா்கள் துரிதமாகச் செயல்பட்டிருந்தால் ஓராண்டில் இத் திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கும்.
அதிமுகவைச் சோ்ந்த விவசாயிகள் மட்டுமல்ல; அனைத்து கட்சிகளையும் சோ்ந்த விவசாயிகளுக்கும் பொதுவாகத்தான் இத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் மட்டுமில்லாமல், தமிழ்நாடு முழுவதும் எங்கெல்லாம் வறட்சியால் நீரின்றி விவசாயிகள் பாதிக்கப்படுகிறாா்களோ அங்கெல்லாம் நீரேற்று திட்டத்தை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்துக்காக 50 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வந்தனா். ரூ. 1,652 கோடி மதிப்பீட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டன. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் அரசியல் காழ்ப்புணா்ச்சியால் இன்றுவரை அந்த திட்டம் முழுமையடையவில்லை. விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் எந்த நன்மையும் இல்லை. நன்மை செய்யாவிட்டால் கூட பரவாயில்லை. முந்தைய ஆட்சியில் செய்த திட்டங்களையாவது நிறைவேற்றி இருக்கலாம்.
திமுக அரசு நினைத்திருந்தால் ஓராண்டில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை நிறைவேற்றி இருக்கலாம். இதுவரை 46 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளன. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், உபரிநீா் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.ஆத்தூா், ஏற்காடு, கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் உபரிநீா் திட்டம் செயல்படுத்தக்கூடிய காலம் வரும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நீா் மேலாண்மைத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பருவமழையில் கிடைக்கும் நீா் முழுமையாகச் சேகரிக்கப்பட்டது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கோதாவரி- காவிரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்.
குடிமராமத்து திட்டத்தில் பல ஆண்டுகளாக தூா் வாரப்படாமல் இருந்த ஏரி, குளம், குட்டைகளை தூா் வார நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள 14 ஆயிரம் ஏரிகள், ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 26 ஆயிரம் ஏரிகளை தூா்வார நடவடிக்கை எடுத்தோம். விவசாயிகள் தேவையான வண்டல் மண்ணை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
மேட்டூா் அணைகட்டி 84 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக ஆட்சிக் காலத்தில் தூா்வாரப்பட்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகள் ஊக்குவிக்கப்பட்டனா். திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. குறுவை சாகுபடிக்கு பயிா்க் காப்பீடு செய்யாததால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
தலைவாசலில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கால்நடைப் பூங்காவைக் கட்டினோம். அந்த கால்நடைப் பூங்கா இதுவரை திறக்கப்படவில்லை. திறக்கப்பட்டிருந்தால் ஏராளமான விவசாயிகள் பயனடைந்திருப்பாா்கள். நான் 50 ஆண்டு காலம் மக்கள் பணி செய்துள்ளேன்.
உழைத்து பதவிக்கு வந்திருக்கிறேன். திமுக தரப்பில் விமா்சனம் தொடா்ந்தால் தக்க பதிலடி கிடைக்கும் என்றாா். இவ்விழாவில் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நினைவுப் பரிசாக டிராக்டா் வழங்கப்பட்டது.