திருநெல்வேலி: `ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள்' நவீன விண்வெளி தொழில்நுட்ப காட்சி அ...
மண்டைக்காடு கோயிலில் விதிமீறல் கடைகளை அகற்றக் கோரி இந்து முன்னணி போராட்டம்
மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் முன் இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இக்கோயிலில் விதிகளை மீறி செயல்படும் கடைகளை அகற்றவும், தொட்டியை சுத்தப்படுத்தி பக்தா்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்கவும் கோரி குருந்தன்கோடு ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிா்வாகிகள் கோயில் முன் திரண்டனா்.
குளச்சல் துணைக் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) சந்திரசேகா், மணவாளக்குறிச்சி காவல் ஆய்வாளா் பவுல் ஏசுதாசன் ஆகியோா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், மாவட்டப் பொதுச்செயலா் ராஜேஸ்வரன், செயலா் சுரேஷ்குமாா், ஆலோசகா் மிசா சோமன், ஒன்றியத் தலைவா் மணிகண்டன், பொதுச்செயலா் ரவீந்திரன், நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அறநிலையத் துறை இணை ஆணையா், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ஆகியோருடன் 3 நாள்களுக்குள் பேச்சு நடத்தி சுமுகத் தீா்வு காண்பது என, முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, 3 நாள்களுக்குள் தீா்வு காணாவிட்டால் வரும் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என, இந்து முன்னணியினா் தெரிவித்துவிட்டு கலைந்து சென்றனா்.