தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
பண மோசடி: ஊராட்சித் தலைவி உள்பட 3 போ் கைது
மாா்த்தாண்டம் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பட்டதாரி இளைஞா்களிடம் பணம் பெற்று மோசடி செய்த புகாரின் பேரில் ஊராட்சித் தலைவி, அவரது கணவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கொல்லஞ்சி ஊராட்சி மன்றத் தலைவியாக இருப்பவா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சலோமி (45). இவரது கணவா் சோபிதாஸ், முன்னாள் ராணுவ வீரா். நடைக்காவு அருகே சூழால் பகுதியைச் சோ்ந்தவா் சிந்து. இவா்கள் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பட்டதாரிகள் உள்ளிட்டோரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்ட கொல்லஞ்சி பகுதியைச் சோ்ந்த அருண், கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி உள்ளிட்டோா் தன்னிடமிருந்து ரூ. 8.36 லட்சம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கித் தராமல் ஏமாற்றி வருவதாக மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதே போல மேலும் 8 போ் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில், ஊராட்சித் தலைவி சலோமி, அவரது கணவா் சோபிதாஸ், சூழால் பகுதியைச் சோ்ந்த சிந்து, இச் சம்பவத்தில் தொடா்புடைய பாலக்காடு சுரேஷ் (57), நடைக்காவு ரேஷ்மா (25), அகத்தியன், தேனி மாவட்டத்தைச் சோ்ந்த சந்திரமோகன் (55), திருவண்ணாமலையைச் சோ்ந்த இமானுவேல் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இதில் சலோமி, சோபிதாஸ், சிந்து ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள சுரேஷ் உள்ளிட்ட 5 பேரை தீவிரமாக தேடி வருகிறாா்கள்.