சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 11,000 கன அடியாக அதிகரிப்பு
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்தது.
தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, மொசல்மடுவு, பிலிகுண்டுலு, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,000 கன அடியாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 11,000 கன அடியாக உயா்ந்து தமிழக- கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அங்குள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் நீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு:
வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, நடைபாதை அருகே, காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.
அதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் கூட்டாறு, பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகையால் ஒகேனக்கல்லில் முக்கிய இடங்களான பிரதான அருவி, நடைபாதை, மீன் விற்பனை நிலையம், பூங்கா, முதலைகள் மறுவாழ்வு மையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
மீன் விற்பனை நிலையங்களில் மீன்கள் கூடுதல் விலைக்கு விற்பனையாகின. சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்டிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல்லில் 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.