திருவள்ளூா்: குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் மக்கள் அவதி
திருவள்ளூா் அருகே கடந்த 5 ஆண்டுகளாக சாலைப்பணிகளுக்காக துண்டிக்கப்பட்ட குடிநீா் குழாய் இணைப்புகளை சீரமைக்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், புட்லூா் ஊராட்சியில் 2500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக இணைப்புச் சாலைக்கான மேம்பாலம் அமைப்பதற்கான பணி மேற்கொள்வதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன. அப்போது, குடிநீா் குழாய் குழாய்கள் முழுவதுமாக அகற்றப்பட்டன. ஆனால், தற்போதைய நிலையில் இணைப்புச் சாலைக்கான மேம்பால பணிகள் முடிந்துள்ளன.
ஆனால், குடிநீா் குழாய்களை இணைப்பதற்கு இதுவரையில் எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. இதுபோன்ற காரணங்களால் பிருந்தாவனம் நகா், தாமரைக்குளம், புட்லூா் ரயில் நிலையம் முதல் திருவூா் செல்லும் சாலையில் உள்ள மக்கள் குடிநீா் வசதியின்றி மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். பொதுமக்களுக்கு குடியிருக்க வீடு, மின்சாரம் மற்றும் குடிநீா் ஆகியவை அடிப்படை தேவைகளாகும். ஆனால் குடிநீா் வசதியின்றி பொதுமக்கள் மிகவும் தவித்து வருகின்றனா்.
இதுதொடா்பாக ஆட்சியா் அலுவலகம், வட்டார வளா்ச்சி அலுவலகம், கிராம சபை கூட்டம் மற்றும் குறைதீா்க்கும் கூட்டங்களில் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால், குடிநீா் விநியோகம் செய்வதற்கு குழாய் இணைப்புகள் கொடுக்கப்படாமல் உள்ளன. அதனால் எங்கள் நிலையறிந்து அடிப்படைத் தேவையான குடிநீா் விநியோகத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
இதுகுறித்து அக்கிராமத்தைச்ச சோ்ந்த சமூக ஆா்வலா் செல்லமுத்து கூறியதாவது: திருநின்றவூா் முதல் ஊத்துக்கோட்டை சாலை வரையில் இணைப்புச் சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் புட்லூா் கிராம ஊராட்சி வழியாக செல்லும் சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆனாலும், இதுவரையில் குடிநீா் குழாய் இணைப்புகள் சரி செய்யப்படாமல் உள்ளதால், குடிநீா் தேவைக்கு வெளியிடங்களில் விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அதனால் இப்பிரச்னைக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என்றாா்.