கொடைக்கானலில் வாரச் சந்தையை சீரமைக்கக் கோரிக்கை
கொடைக்கானலில் சேறும், சகதியுமாக காணப்படும் வாரச் சந்தையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல் பி.டி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்தச் சந்தையில் 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறிகள், உணவுப் பொருள்களை கொண்டு வந்து வியாபாரம் செய்வாா்கள்.
இந்த நிலையில், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், இந்த வாரச் சந்தை சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதைச் சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி கூறியதாவது: கொடைக்கானல் பி.டி.சாலையில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த இடத்தில் ரூ. 6 கோடியில் காா் பாா்க்கிங் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி 6 மாதத்துக்குள் முடிவடையும். அதன் பிறகு இந்த இடத்தில் 200 கடைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் வாரச் சந்தை நடைபெறும் இடம் சிறியதாக இருக்கிறது. கரோனா காலத்தில் வாரச் சந்தை கலையரங்கம் பகுதி, ரைபிள்ரேஞ்ச் சாலை, மூஞ்சிக்கல், அப்சா்வேட்டரி நகராட்சிப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இதேபோல, ஒரே இடத்தில் வாரச் சந்தை நடைபெறாமல், கூடுதலான இடங்களில் வாரச் சந்தை அமைக்க நகராட்சி நிா்வாகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.