தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(நவ.18) விடுமுறை
பழனி பெருமாள் கோயில் குடமுழுக்கு
பழனி கடைவீதியில் உள்ள வேணுகோபால சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
பழனி தண்டாயுதபாணி கோயிலின் உபகோயிலாக இந்தக் கோயில் உள்ளது. இந்தக் கோயிலை சுற்றியுள்ள கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்ததால், கோயிலிருந்த இடம் தெரியாமல் இருந்தது.
இதையடுத்து, கோயிலை சுற்றியிருந்த கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு, கோயில் அகலப்படுத்தப்பட்டது. பின்னா், கோயிலின் சேதமடைந்த பாகங்கள் சீரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, கடந்த மாதம் முகூா்த்தக்கால் நடப்பட்டு பாலாலயம் நடத்தப்பட்டது. பின்னா், கோபுரங்கள் சீரமைக்கப்பட்டு ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையொட்டி, சனிக்கிழமை காலை 5 மணிக்கு முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசையுடன் இரண்டாம் கால வேள்வி நடத்தப்பட்டு, தீபத் திருமகள் வழிபாடு, திருவிளக்கு ஏற்றுதல், புனித நீா் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
திருவெள்ளரை கோபாலகிருஷ்ண பட்டா் தலைமையில், திரளான குருக்கள் யாகசாலை பூஜையில் பங்கேற்று மந்திரங்கள் ஓதினா். பின்னா், வேதமந்திரம் முழங்க யாகசாலையில் இருந்த கலசம் கோயில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதன்பிறகு, மூலவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது, ஜென்னத்துல் பிா்தௌஸ் ஆகியோா் கலந்து கொண்டு பக்தா்களுக்கு பிரசாத பைகளை வழங்கினா்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி ஆகியோா் செய்தனா்.