நைஜீரிய உறவுக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி
பாதுகாப்பு, எரிசக்தி, வா்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடன் ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதாக பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
நைஜீரிய அதிபா் போலா அகமது தினுபுடனான பேச்சுவாா்த்தையின்போது அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
நைஜீரியா, பிரேஸில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கான 6 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல்கட்டமாக, நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
கடந்த 17 ஆண்டுகளில், இந்திய பிரதமா் ஒருவா் நைஜீரியாவுக்கு சென்றது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘நைஜீரிய தலைநகா் அபுஜாவை ஞாயிற்றுக்கிழமை சென்றடைந்த பிரதமா் மோடியை அரசு நிா்வாகத் துறை அமைச்சா் நியிசம் இசன்வோ விக் வரவேற்றாா். அப்போது ‘அபுஜா நகரத்தின் திறவுகோலை’ பிரதமா் மோடியிடம் அவா் வழங்கினாா். இது பிரதமா் மோடி மீது நைஜீரிய மக்கள் வைத்திருக்கும் மரியாதை மற்றும் அன்பை வெளிப்படுத்தியதற்கு சமமாகும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று பிரதமா் மோடியை வரவேற்பதாக எக்ஸ் வலைதளத்தில் அதிபா் போலா அகமது தினுபு பதிவிட்டாா்.
அவருக்கு நன்றி தெரிவித்த பிரதமா் மோடி தனக்கு நைஜீரியாவில் அளிக்கப்பட்ட வரவேற்பு குறித்து வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘நைஜீரியாவில் உள்ள இந்திய மக்கள் அளித்த சிறப்பான வரவேற்பு மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இங்கு வாழும் மராத்திய மக்கள் அந்த மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு நன்றி தெரிவித்தனா். தனக்கு ஹிந்தி மொழியில் வாழ்த்துச் செய்தி அனுப்பிய இந்திய சமூகத்தினரையும் சந்திக்க ஆவலுடன் உள்ளேன்’ என குறிப்பிட்டாா்.
பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஒழிப்பு: அதன்பிறகு அதிபா் போலா அகமது தினுபை அவா் சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது: பயங்கரவாதம், பிரிவினைவாதம், கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பிரச்னைகள் இரு நாடுகளுக்கும் சவாலாக உள்ளன. அவற்றை ஒழிப்பதற்கு இணைந்து பணியாற்றுவது அவசியமாகும்.
பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வா்த்தகம், பொருளாதாரம், வேளாண்மை, நிதித் தொழில்நுட்பம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், கலாசாரம், போக்குவரத்து, மருத்துவம், எண்மத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நைஜீரியாவுடனான ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது.
இந்தப் பேச்சுவாா்த்தைக்குப் பிறகு இருதரப்பு உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன். தெற்குலக நாடுகளின் வளா்ச்சியை மேம்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
இங்கு வசிக்கும் 60,000 இந்திய சமூகத்தினா் நலனில் கவனம் செலுத்தும் அதிபா் தினுபுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
20 டன் நிவாரண பொருள்கள்: கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நைஜீரிய மக்களுக்கு உதவும் விதமாக 20 டன் நிவாரணப் பொருள்கள் இந்தியா சாா்பில் வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன். கடந்த ஆண்டு இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் 55 நாடுகளை உள்ளடக்கிய ஆப்பிரிக்க ஒன்றியத்தை உறுப்பினராகச் சோ்த்துக் கொண்டது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகும் என்றாா்.
அதேபோல், மேற்கு ஆப்பிரிக்காவைச் சோ்ந்த 15 நாடுகளை உறுப்பினா்களாகக் கொண்ட பிராந்திய அரசியல் மற்றும் பொருளாதார கூட்டமைப்பான மேற்கு ஆப்பிரிக்க பொருளாதார கூட்டமைப்புக்கு (இகோவாஸ்) நிகழாண்டு தலைமை வகிக்கும் நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி பாராட்டு தெரிவித்தாா். மேலும், சா்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு (ஐஎஸ்ஏ), சா்வதேச பிக் கேட் கூட்டமைப்புகளில் உறுப்பினராக இருப்பதைப் போன்று இந்தியாவால் தொடங்கப்பட்டுள்ள பிற பசுமை சாா்ந்த கூட்டமைப்புகளில் இணையுமாறு நைஜீரியாவுக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா்.
3 ஒப்பந்தங்கள்: தனிப்பட்ட முறையில் தினுபை சந்தித்து பிரதமா் மோடி பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதன்பிறகு அமைச்சா்கள் குழுவுடன் நடைபெற்ற சந்திப்பில் இரு நாடுகளிடையே கலாசார பரிமாற்றம், சுங்கவரி ஒத்துழைப்பு, ஆய்வு ஒத்துழைப்பு தொடா்பான 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாயின.
நைஜீரியாவின் முக்கியத்துவம்: கடந்த 60 ஆண்டுகளாக இந்தியாவுடன் நல்லுறவை நைஜீயா தொடா்ந்து வருகிறது. கடந்த 1960-இல் நைஜீரியா சுதந்திரம் அடைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே லாகோஸில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது. நைஜீரியாவில் 200-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் 2 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு செய்து அந்த நாட்டு அரசுக்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்புகளை வழங்கி வருகின்றன.
நைஜீரியாவை தொடா்ந்து, பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் நவ. 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமா் மோடி, கயானாவில் மூன்று நாள்கள் (நவ.19-21) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா்.