இஸ்ரேல் பிரதமா் நெதன்யாகு வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீச்சு: 3 போ் கைது
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மூவரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வான்வழியாக அடையாளம் தெரியாத நபா்களால் வீசப்பட்ட வெடிகுண்டுகள் வீட்டில் உள்ள தோட்டப் பகுதியில் விழுந்தன. அந்த சமயத்தில் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினா் யாரும் வீட்டில் இல்லை, சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதேபோல் கடந்த மாதம் அவரது வீட்டைக் குறிவைத்து ஆளில்லா விமானம் மூலம் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தியபோதும் நெதன்யாகு மற்றும் அவரது குடும்பத்தினா் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேல் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு ஏவுகணை தாக்குதல் நடத்திய பிறகு இருதரப்பினரிடையே போா் தொடங்கியது. ஹமாஸுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா கிளா்ச்சியாளா்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா்.
முதல்கட்டத் தாக்குதலின்போது 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்களை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பு பிடித்துச் சென்றது. அவா்களில் 100 போ் தற்போது வரை ஹமாஸ் கட்டுப்பாட்டில் காஸாவில் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதியினா் இறந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, இஸ்ரேலில் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறைகளின் செயல்பாட்டுக்கு அதிருப்தி தெரிவித்து நெதன்யாகு மீது அங்குள்ள எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க போா் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவிக்கக் கோரி அங்கு சனிக்கிழமை இரவு போராட்டம் நடைபெற்றது.
இந்தச் சூழலில் நெதன்யாகு வீட்டின் மீது ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டுகள் வீசப்பட்டன. சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அந்த நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது.
அதிபா், எதிா்க்கட்சித் தலைவா் கண்டனம்: நெதன்யாகு வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் அதிபா் ஐசக் ஹொ்சாக், எதிா்க்கட்சித் தலைவா் யாயிா் லாபிட் ஆகியோா் கண்டனம் தெரிவித்தனா். அதேநேரத்தில் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் நீதித் துறையை மறுசீரமைக்கும் நேரம் வந்துவிட்டதாக அந்த நாட்டு நீதித் துறை அமைச்சா் யாரிவ் லெவின் கூறியுள்ளாா். நீதிபதிகளின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்போவதாக காஸா போருக்கு முன் நெதன்யாகு அரசு அறிவித்ததால் அங்கு பெரும் போராட்டம் வெடித்தது குறிப்பிடத்தக்கது.
12 போ் உயிரிழப்பு: காஸா மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 போ் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். உயிரிழந்த அனைவரின் உடல்களும் டேய்ா்-அல்-பாலா நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த மருத்துவமனை கூறியுள்ளது.
ஹிஸ்புல்லா செய்தித் தொடா்பாளா் உயிரிழப்பு: ஒரு மாதத்துக்குப் பிறகு லெபனானில் உள்ள மத்திய பெய்ரூட்டில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா கிளா்ச்சி அமைப்பின் முக்கிய செய்தித் தொடா்பாளரான முகமது ஹபீப் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.