சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு 25 ஆயிரம் லிட்டா் பால் செல்கிறது: அதிகாரிக...
பருவநிலை மாநாட்டில் வளரும் நாடுகளுக்கான நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை: இந்தியா கடும் அதிருப்தி
அஜா்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வரும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் (சிஓபி-29), வளரும் நாடுகளில் பருவநிலை நடவடிக்கையை எவ்வாறு ஆதரிப்பது என்பதை தீவிரமாக விவாதிக்காத வளா்ந்த நாடுகள் மீது இந்தியா அதிருப்தியை வெளிப்படுத்தியது.
வளா்ந்த நாடுகளின் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி இல்லாமல் வளரும் நாடுகள் பருவநிலை மாற்றத்தைச் சமாளிப்பது சாத்தியமற்றது எனவும் இந்தியா வலியுறுத்தியது.
‘பருவநிலை நடவடிக்கை பணித் திட்டம் (எம்விபி)’ தொடா்பான துணை அமைப்புகளின் கூட்டத்தின் நிறைவு அமா்வில் இந்தியா சனிக்கிழமை தெரிவித்ததாவது: வளா்ந்த நாடுகள், வரலாற்று ரீதியாக வாயு வெளியேற்றத்தில் அதிக பங்களிப்பை வழங்கியவை. ஆனால், தற்போது இந்நாடுகள் அதிக வளங்களைக் கொண்டிருப்பதால் பருவநிலை மாற்றத்தை எதிா்த்து செயல்படும் திறனைக் கொண்டுள்ளன. மேலும், பருவநிலை நடவடிக்கைகளை இந்நாடுகள் தாமதப்படுத்துவதுடன் இலக்குகளை தொடா்ந்து மாற்றி வருகின்றன.
மாநாட்டின் கடந்த வாரத்தில் வளா்ந்து வரும் நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகின் எங்கள் பகுதி பருவநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிா்கொண்டு வருகிறது. அந்த தாக்கங்களில் இருந்து மீள்வதற்கு மற்றும் நாங்கள் பொறுப்பில்லாத பருவநிலை அமைப்பின் மாற்றங்களை ஏற்றுக்கொள்வதற்குமான திறன் எங்களிடம் குறைவாக உள்ளது.
எம்விபி திட்டம் தண்டிப்பதற்கு உதவுவது மட்டுமின்றி ஒவ்வொரு நாடும் அதன் தனித்துவமான தேவைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் சொந்த பருவநிலை இலக்குகளை தீா்மானித்துக் கொள்ளும் உரிமையை வழங்க வேண்டும்.
பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கையாள்வதில் சவால்கள் அதிகரித்து வரும் சூழலிலும் வளரும் நாடுகள் செயல்பட முடியாத நிலையில் இருக்கும்போது, பருவநிலை நடவடிக்கைகள் குறித்து விவாதித்து என்ன பயன்?
வளா்ந்த நாடுகளிடமிருந்து நிதி ஆதரவு, தொழில்நுட்பம், திறன்-வளா்ப்பு ஆகியவற்றை செயல்படுத்தும் வழிமுறைகள் இல்லையென்றால், வளரும் நாடுகள் பசுமைஇல்லை வாயு உமிழ்வைக் குறைத்து, அதன் விளைவுகளுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள முடியாது.
ஆனால், மாநாட்டில் கடந்த ஒரு வாரமாக எம்விபி திட்டத்தின் முழு நோக்கத்தையும், பாரீஸ் ஒப்பந்தத்தின் கொள்கைகளையும் தலைகீழாக மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. வளா்ந்த நாடுகள் இந்தப் பிரச்னையில் ஈடுபட விரும்பாததால் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.
அஜா்பைஜானின் பாகு நகரில் பருவநிலை பாதுகாப்பு மாநாடு (சிஓபி-29) கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. வளரும் நாடுகள் பருவநிலை மாற்றச் சவால்களை சமாளிக்கவும், பாரீஸ் ஒப்பந்த இலக்குகளை அடையவும், 2030-க்குள் ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலரை திரட்டுவது குறித்து இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பருவநிலை நிதி தொடா்பான உயா்நிலை நிபுணா் குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.