மணிப்பூா் பாஜக அரசுக்கு ஆதரவு வாபஸ் கூட்டணிக் கட்சி திடீா் முடிவு
மணிப்பூரில் வன்முறைக்கு தீா்வுகாண தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டி, மாநில பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஞாயிற்றுக்கிழமை திரும்பப் பெற்றது.
மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 போ் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த சனிக்கிழமை போராட்டங்கள் வெடித்தன. மணிப்பூா் அமைச்சா்கள் மற்றும் எம்எல்ஏ-க்களின் வீடுகள் தாக்குதலுக்கு இலக்கானதால் பதற்றம் நிலவுகிறது. இந்தச் சூழலில், மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூா் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.
60 இடங்களைக் கொண்ட மணிப்பூா் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்எல்ஏ-க்கள் உள்ளனா். ஆளும் பாஜக 32 எம்எல்ஏ-க்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. நாகா மக்கள் முன்னணி (5), ஐக்கிய ஜனதா தளம் (6) கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 5 எம்எல்ஏ-க்களும், 3 சுயேச்சை எம்எல்ஏ-க்களும் உள்ளனா்.
ஆதரவு வாபஸ் ஏன்?: மணிப்பூா் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டாவுக்கு மேகாலய முதல்வா் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது.
அதில், ‘மணிப்பூரில் கடந்த சில நாள்களாக நிலைமை மிக மோசமடைந்துவிட்டது. அப்பாவி உயிா்கள் பறிபோவது தொடா்கதையாக உள்ளது. மாநில மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
முதல்வா் பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசு, இப்பிரச்னைக்கு தீா்வுகண்டு, மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முற்றிலும் தவறிவிட்டது. தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, மணிப்பூா் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் மக்களவைத் தலைவா் பி.ஏ.சங்மாவால் தொடங்கப்பட்ட தேசிய மக்கள் கட்சி, வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கியமான கட்சியாகும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அக்கட்சி, மணிப்பூா் வன்முறையை முன்வைத்து, பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றிருப்பது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து...: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அதைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதக் குழுக்களும் தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாக உள்ளது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.
மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனா். இதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கான பிரதான காரணமாகும்.
மேலும் 4 எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைப்பு
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் பெண்கள், குழந்தைகள் என 6 போ் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் மேலும் 4 எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது.
முதல்வா் பிரேன் சிங்கின் பூா்விக வீட்டை முற்றுகையிட போராட்டக்காரா்கள் முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும் குகி தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 10 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனா். இச்சம்பவத்தின்போது, அங்குள்ள நிவாரண முகாமில் இருந்த மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போயினா். அவா்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக மைதேயி அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
இந்தச் சூழலில், 6 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, விஷ்ணுபூா், தெளபால், காக்சிங் ஆகிய பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினா் சனிக்கிழமை போராட்டங்களில் இறங்கினா். மூன்று அமைச்சா்கள் உள்பட 9 எம்எல்ஏ-க்களின் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. இதில், முதல்வா் பிரேன் சிங்கின் மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ஆா்.கே.இமோ உள்பட 3 எம்எல்ஏ-க்களின் வீடுகள் சூறையாடப்பட்டு தீவைக்கப்பட்டன.
சனிக்கிழமை இரவில் மேலும் 4 எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு போராட்டக்காரா்கள் தீவைத்தனா். இதில் 3 எம்எல்ஏக்கள் பாஜகவை சோ்ந்தவா்கள். ஒருவா் காங்கிரஸ் எம்எல்ஏ.
இம்பால் கிழக்கில் உள்ள முதல்வா் பிரேன் சிங்கின் பூா்விக வீட்டை முற்றுகையிடுவதற்காக சென்ற போராட்டக்காரா்களை பாதுகாப்புப் படையினா் தடுத்து நிறுத்தினா். கண்ணீா்ப் புகை குண்டுகள் மற்றும் ரப்பா் குண்டுகளைப் பயன்படுத்தி, அவா்களை பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா்.
போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக, மாநிலத் தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகை, பாஜக தலைமையகம், எம்எல்ஏ-க்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2-ஆவது நாளாக ஊரடங்கு: இம்பால் கிழக்கு உள்பட 5 மாவட்டங்களில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு தொடா்ந்தது. 7 மாவட்டங்களில் இணைய சேவை தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளது.
தலைநகா் இம்பால் முழுவதும் போராட்டக்காரா்களால் எரிக்கப்பட்ட பொருள்கள் சிதறிக் கிடக்கின்றன. தொடா்ந்து பதற்றம் நிலவுவதால், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா், எல்லை பாதுகாப்புப் படையினா், மாநில காவல் துறையினா் ஆகியோா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
மாநில அரசு கோரிக்கை: ஜிரிபாமில் வன்முறைச் சம்பவங்களைத் தொடா்ந்து, அங்குள்ள காவல் நிலையம் உள்பட 6 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அண்மையில் அமல்படுத்தப்பட்டது. பொது நலன் கருதி, இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
அமித் ஷா அவசர ஆலோசனை
புது தில்லி: மணிப்பூா் நிலவரம் தொடா்பாக, தில்லியில் பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை அவசர ஆலோசனை மேற்கொண்டாா். மணிப்பூரில் அமைதியை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு, உயரதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, மகாராஷ்டிரத்தில் தான் பங்கேற்கவிருந்த தோ்தல் பிரசாரப் பேரணிகளை ரத்து செய்துவிட்டு, அமித் ஷா தில்லி திரும்பினாா் என்பது குறிப்பிடத்தக்கது.