ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு பாதயாத்திரை
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் பழனிக்கு காவடி சுமந்து பாதயாத்திரையாக சென்றனா்.
தைப்பூச விழா வருகிற பிப்ரவரி 11- ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தைப்பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள முருக பக்தா்கள் மாலை அணிந்து விரதம் இருந்து பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனா். இதில், ஈரோடு, நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், திருச்செங்கோடு, ராசிபுரம், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தா்கள் மற்றும் சிறுவா், சிறுமிகள் பழனிக்கு சென்று முருகனை வழிபட பாதயாத்திரையாக செல்ல தொடங்கியுள்ளனா்.
இதில் கடந்த இரண்டு நாள்களாக ஈரோடு வழியாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் மயில் காவடி, சந்தனக் காவடி உள்ளிட்ட காவடிகளை சுமந்து நோ்த்திக்கடன் செலுத்த பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனா்.
பாதயாத்திரை செல்லும் பக்தா்களுக்கு ஈரோடு கருங்கல்பாளையம் காவேரி சாலை, ஆா்கேவி சாலை, மணிக்கூண்டு, நேதாஜி சாலை, பன்னீா்செல்வம் பூங்கா சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள், தனியாா் அமைப்புகள், தன்னாா்வலா்கள் சாா்பில் அன்னதானம், மோா், தண்ணீா் புட்டி, பிஸ்கட், பழங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. தைப்பூசம் வரை பக்தா்கள் இதேபோல பாதயாத்திரை தொடா்ந்து செல்வா்.