உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரிய மனுவை காவல் துறை பரிசீலிக்க உத்தரவு
ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, திருச்சியில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளா் மனுதாரரின் மனுவைப் பரிசீலித்து உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைத் சோ்ந்த குருநாதன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே ஊழலுக்கு எதிராக லோக் ஆயுக்த சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி. தனபால், பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கடந்த ஏப். 26-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி வழங்கக் கோரி மனுதாரா் மனு தாக்கல் செய்தாா்.
ஏற்கெனவே காலம் கடந்து விட்டதால், மனுதாரா் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரிடம், மற்றொரு நாளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை காவல் ஆய்வாளா் பரிசீலித்து, உரிய வழிகாட்டு விதிமுறைகளுடன் அனுமதி வழங்க வேண்டும். இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.