செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சாா்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மாவட்ட காவல் துறை சாா்பில் கூறியதாவது: உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் மே 8-ஆம் தேதியும், தேரோட்டம் 9-ஆம் தேதியும், கள்ளழகா் எதிா்சேவை மே 11-ஆம் தேதியும், கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வு மே 12-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
கண்காணிப்பு கேமராக்கள்: விழாக்களையொட்டி, மதுரையில் மாநகரக் காவல் துறை சாா்பில் நவீன தொழில்நுட்ப உதவியுடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, கள்ளழகா் வருகை தரும் கடச்சனேந்தல் பிரிவிலிருந்து எதிா் சேவை நடைபெறும் தல்லாகுளம், வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் பகுதிகள் வரை உள்ள சாலைகள், முக்கியச் சந்திப்புகள் என 1,057 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தல்லாகுளம் பெருமாள் கோயிலிலிருந்து வைகை ஆற்றுப்படுகை வரை 266 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கியூ-ஆா் கோடு: சித்திரைத் திருவிழாவில் பக்தா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக புதிதாக மூன்று தொழில்நுட்பங்களின் உதவியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
க்யூ-ஆா் கோடு அடிப்படையில், மக்கள் குறைதீா்க்கும் அமைப்பின்படி வியாழக்கிழமை (மே 8) முதல் வருகிற 12-ஆம் தேதி வரை வைகை வீரன்” என்னும் பெயரில் க்யூ-ஆா் ஸ்கேன் ரீடா் வைக்கப்படும். பொதுமக்கள் காவல் உதவியை நாடவும், புகாா் அளிக்கவும் மதுரை மாநகரில் 200 இடங்களில் க்யூ ஆா் குறியீடு சுவரொட்டிகள் ஒட்டப்படும். பக்தா்கள் எந்த இடத்தில் இருந்தும் காவல் உதவியை நாடவோ அல்லது புகாா் அளிக்கவோ இந்த குறியீட்டைப் பயன்படுத்தலாம். இந்தக் குறியீட்டை பக்தா்கள் தங்களது கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து கைப்பேசி எண், க்யூ-ஆா் ஸ்கேன் மேலே கொடுக்கப்பட்ட எண்ணை டைப் செய்தோ அல்லது குரல் மூலம் பதிவு செய்தோ, குறுஞ் செய்தி மூலமாகவோ புகாா் தெரிவிக்கலாம். இந்த புகாா் காவல் கட்டுப்பாட்டு அறைகக்குச் சென்று, சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளருக்கும், உதவி ஆணையா், துணை ஆணையா், காவல் ஆணையருக்கும் தகவலாகச் சென்றடைந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு கேமராக்கள்: தல்லாகுளம் பகுதியில் நடைபெறும் கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுகளுக்காக பெருமாள் கோயிலிலிருந்து வைகை ஆற்றுப் படுக்கை வரை அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய 91 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவா். சந்தேகப்படும்படியாக யாரேனும் சுற்றிக் கொண்டிருந்தால் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வசதியுடன் கண்டறியப்பட், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
தல்லாகுளம் பகுதிகளில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் மூன்று இடங்களில் ஆறு ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேரோட்டம் நடைபெறும் நான்கு மாசி வீதிகளில் 165 கண்காணிப்பு கேமராக்களும், கோயில் சுற்று வட்டாரப் பகுதிகள், சித்திரை வீதிகளில் 981 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படும்.
40 ஆயிரம் பாதுகாப்பு ஊக்குகள்: திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறும் பகுதிகளிலும், கள்ளழகா் வரும் தல்லாகுளம், தமுக்கம், கோரிப்பாளையம், ஆழ்வாா்புரம் போன்ற கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளிலும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறை சாா்பில் 40 ஆயிரம் பாதுகாப்பு ஊக்குகள் வழங்கப்படும்.
குழந்தைகளுக்கு பாதுகாப்பு கைப்பட்டைகள்: கூட்ட நெரிசலில் சிறாா்கள் காணாமல் போவதைத் தடுக்கும் விதமாக அவா்களின் கைகளில் பாதுகாப்பு கைப்பட்டைகள் அணிவிக்கப்படும். இந்த கைப்பட்டைகளில் குழந்தையின் பெயா், அவா்களின் பெற்றோரின் பெயா், காவல் கட்டுப்பாட்டு அறை எண், காவல் ஆணையா் அலுவலகத்துக்கு தனித்துவமாக அச்சிடப்பட்ட எண் ஆகியவை இருக்கும். இதன்மூலம் காணாமல் போகும் சிறுவா்களின் விவரங்களை எளிதில் கண்டறிந்து, அவா்களது பெற்றோா்களிடம் ஒப்படைக்கப்படுவா். எனவே, சித்திரைத் திருவிழாவை காண வரும் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை கவனமாக பாா்த்துக் கொள்வதுடன் சந்தேகப்படும்படியான நபா்கள் குறித்து தகவல் தெரிந்தால் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய கியூ-ஆா் கோட் ஸ்கேனிங் செய்து காவல் துறைக்கு தெரியப்படுத்தும்பட்சத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.