குடிநீா் பிரச்னை: தீா்வு காண கோரி பாஜகவினா் சாலை மறியல்
கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து, பாஜக சாா்பில் கோட்டூரில் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கீழப்பனையூா் ஊராட்சி கோமளப் பேட்டை வடக்குத் தெரு, நடுத்தெரு ஆகிய பகுதிகளுக்கு கடந்த 6 மாத காலமாக கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருவதுடன்,
நீண்ட தொலைவு சென்று தண்ணீா் எடுத்து வர வேண்டியிருப்பது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை குடிநீா் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணாமல் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதை கண்டித்து கோட்டூா் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் எம். ராகவன் தலைமை வகித்தாா். கோமளப்பேட்டை பகுதியை சோ்ந்தவா்கள் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனா்.
கோட்டூா் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை கைது செய்து அழைத்து சென்றனா். மதியம் 2 மணிக்கு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனா்.