கோயில் திருவிழாவில் பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் கைது
குடவாசலில் கோயில் திருவிழாவின்போது, பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் குரு (31). இவரும், அப்பகுதியைச் சோ்ந்த 21 வயதுடைய பெண்ணும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்தனராம். இருவரும் ஒரே பிரிவைச் சோ்ந்தவா்கள். குருவின் தவறான நடத்தையால், அந்த பெண், குருவுடன் பழகுவதை நிறுத்திவிட்டு, சென்னைக்கு வேலைக்கு சென்று விட்டாா்.
இந்நிலையில், குடவாசல் மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக வந்திருந்த அந்த பெண், நோ்த்திக்கடனாக பால்குடம் எடுத்துவந்தாா். அப்போது, அவருக்கு குரு தாலி கட்ட முயன்றாராம். அருகில் இருந்தவா்கள் தடுத்து, குருவை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து குருவை கைது செய்தனா்.