லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சாா் பதிவாளா், எழுத்தா் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகா் கூட்டுறவுச் சங்கங்களின் சாா் பதிவாளா், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டணத்தைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி (72). இவா் தேவகோட்டை கூட்டுறவுச் சங்கத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த 1982-ஆம் ஆண்டு ரூ. 3 ஆயிரம் கடன் பெற்றாா். இந்தக் கடன் கடந்த 1990-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, கடன் ரத்து பத்திரம் பெறவும், அடகு வைத்த பத்திரத்தைத் திரும்பப் பெறுவதற்காகவும் ஆரோக்கியசாமி, விருதுநகா் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் சாா் பதிவாளா் முருகனை (43) அணுகினாா். அப்போது அவா், ரூ. 5,000 லஞ்சம் கேட்டாராம்.
இதுகுறித்து ஆரோக்கியசாமி விருதுநகா் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவில் புகாா் அளித்தாா். அவா்களது ஆலோசனையின் பேரில், ரசாயனப் பொடி தடவிய 5,000 ரூபாயை அலுவலக எழுத்தா் மோகனிடம், ஆரோக்கியசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினாா். அப்போது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ராமச்சந்திரன், ஆய்வாளா் பூமிநாதன் தலைமையிலான போலீஸாா், எழுத்தா் மோகன், சாா் பதிவாளா் முருகன் ஆகியோரைக் கைது செய்தனா்.