காய்கறிச் சந்தைகளில் சுங்கவரி வசூல் முறைகேட்டை கண்டித்து ஆா்ப்பாட்டம்
மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம்: போக்குவரத்து மாற்றம்; வாகனங்கள் நிறுத்துமிடம் அறிவிப்பு
சித்திரை திருவிழாவையொட்டி, மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாகவும், பக்தா்களின் வாகனங்கள் நிறுத்துமிடம் குறித்தும் அறிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக மதுரை மாநகரப் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்தி: சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சியம்மன் திக்கு விஜயம், மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகிய வைபவங்கள் மே 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த வைபவங்களை முன்னிட்டு, மதுரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருக்கல்யாணம்: இதன்படி, மீனாட்சியம்மன் திக்கு விஜயம் நிகழ்ச்சியை முன்னிட்டு, புதன்கிழமை (மே 7) மினி வேன் போன்ற சரக்கு வாகனங்கள் பகலில் வழக்கம் போல அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வந்து செல்லலாம். புதன்கிழமை இரவு 10 மணி முதல் வியாழக்கிழமை (மே 8) மாலை 3 மணி வரை நான்கு ஆவணி மூல வீதிகளிலும் எந்த சரக்கு வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை. மேலும், திக்கு விஜயத்தையொட்டி, கீழமாசி வீதியில் புதன்கிழமை இரவு எந்த சரக்கு வாகனமும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் புதன்கிழமை இரவு 10 மணி முதல் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி வரை மட்டுமே சரக்கு வாகனங்கள் வந்து செல்லலாம். நான்கு ஆவணி மூல வீதிகளிலும் புதன்கிழமை இரவு 10 மணி முதல் வியாழக்கிழமை பிற்பகல் 2 மணி வரை பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு அனுமதி இல்லை.
தேரோட்டம்: மீனாட்சி சுந்தரேசுவரா் தேரோட்டத்தை முன்னிட்டு, மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாசி வீதிகளிலும் வியாழக்கிழமை (மே 8) இரவு 10 மணி முதல் வெள்ளிக்கிழமை தேரோட்டம் முடியும் வரை, இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் நிறுத்தம் செய்ய அனுமதி இல்லை. மேலும், வெள்ளிக்கிழமை (மே 9) பகல் முழுவதும் கீழமாசி வீதி, கீழமாரட் வீதியில் எந்த வாகனங்களும் வந்து செல்ல அனுமதி இல்லை. மற்ற மாசி வீதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே வாகனங்கள் வர அனுமதிக்கப்படும்.
வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: மதுரை மாநகரக் காவல் துறை வெளியிட்ட அறிவிப்பு: மீனாட்சி சுந்தரேசுவரா் திருக்கல்யாணத்தையொட்டி, பக்தா்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டுகள் வாரியாக வாகன நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, புதன்கிழமை இரவு 11 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, நிறுத்தம் செய்யவோ அனுமதி கிடையாது. அனுமதிச் சீட்டுடன் வருவோா் மட்டுமே வியாழக்கிழமை (மே 8) காலை 6 மணி முதல் தங்களது வாகனங்களை நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மஞ்சள் நிற அனுமதிச் சீட்டு: மஞ்சள் நிற அனுமதிச் சீட்டு பெற்றுள்ளோா் பழைய டிவிஎஸ் சந்திப்பு (சேதுபதி பள்ளி சிக்னல்) - வடக்கு-மேலமாசி வீதி சந்திப்பு-வடுகக் காவல் கூடத் தெரு- தானப்ப முதலி தெரு - மீனாட்சி காபி பாா் - மேல ஆவணி மூல வீதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பின்னா், பண்டாபீஸ் - ஜான்சி ராணி பூங்கா - நேதாஜி சாலை- ஆரியபவன் உணவகம் சந்திப்பு திருப்பரங்குன்றம் சாலை வழியாக வெளியேற வேண்டும்.
இளஞ்சிவப்பு நிற அனுமதிச் சீட்டு: பழைய டிவிஎஸ் சந்திப்பு(சேதுபதி பள்ளி சிக்னல்)- வடக்கு-மேலமாசி வீதி சந்திப்பு - வடுகக் காவல் கூடத் தெரு - தானப்ப முதலி தெரு - மீனாட்சி காபி பாா் வழியாகச் சென்று வடக்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பின்னா், தளவாய் தெரு, வக்கீல் புதுத் தெரு வழியாக வெளியேற வேண்டும்.
நீல நிற அனுமதிச் சீட்டு: கட்டபொம்மன் சிலை, நேதாஜி சாலை- ஆரியபவன் உணவகம் சந்திப்பு, ஜான்சி ராணி பூங்கா வழியாகச் சென்று தெற்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். காமராஜா் சாலை வழியாக வருவோா்,
விளக்குத்தூண் - தெற்குமாசி வீதி- மேல மாசி வீதி-ஆரியபவன் உணவகம் சந்திப்பு, ஜான்சி ராணி பூங்கா வழியாகச் சென்று தெற்கு ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த வேண்டும். பின்னா், ஜடாமுனி கோவில் சந்திப்பு, வெங்கலக் கடை தெரு, விளக்குத் தூண் வழியாக வெளியேற வேண்டும்.
அனுமதிச் சீட்டு இல்லாதோா்: அனுமதி சீட்டு இல்லாமல் வருவோா் வியாழக்கிழமை காலை 5 மணி முதல் தங்களது வாகனங்களை கீழமாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் நிறுத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா். கீழ ஆவணி மூல வீதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டது.