ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்!
சித்ரா பெளா்ணமி, வார விடுமுறை: சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சித்ரா பெளா்ணமி மற்றும் வார விடுமுறையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிா்வாக இயக்குநா் எஸ்.ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சாா்பில், சேலம் மற்றும் தருமபுரி மண்டலத்தில் நாள்தோறும் 1,900 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு 14 லட்சம் பயணிகளுக்கு மேல் சேலம் கோட்ட பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே 2-ஆம் சனிக்கிழமை (மே 10) மற்றும் சித்ரா பெளா்ணமி (மே 12) தினங்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் கோட்டம் சாா்பில், பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வரும் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை 500 சிறப்பு பேருந்துகள் சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்பட உள்ளன. இணையதளம் மற்றும் செயலி வழியாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்துகொள்ளலாம்.
சித்ரா பெளா்ணமி நாளில் பக்தா்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வசதியாக சேலம், ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூா் மற்றும் பெங்களூரு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும், சேலம், தருமபுரி மற்றும் ஒசூா் பேருந்து நிலையங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளுக்கு 10-ஆம் தேதி காலை 6 மணி முதல் 12-ஆம் தேதி மாலை 5 மணி வரை ஒருமணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.