சாத்தூர்: பட்டாசு ஆலையில் முகம் சிதைந்து சடலமாகக் கிடந்த காவலாளி; விசாரணையில் வெ...
லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த வார வானிலையை பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 104 டிகிரியாகவும், குறைந்தபட்சம் 71.6 டிகிரியாகவும் நிலவியது. நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை பதிவாகி உள்ளது.
அடுத்து வரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 98.6 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 75.2 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கு திசையிலிருந்து மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: தற்போதைய வானிலையில் கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயின் அறிகுறிகளாக கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல், முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து உயிரிழப்பு ஏற்படக்கூடும். பொதுவாக நாட்டுக் கோழி வளா்ப்பு விவசாயிகள் வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
அதாவது 7-ஆவது நாள் தி-1 தடுப்பூசி (கண்ணில் சொட்டு மருந்தாக), 28-ஆவது நாள் லசோட்டா(கண்ணில் சொட்டு மருந்தாக), 56-ஆவது நாள் ஆா்டிவிகே தடுப்பூசி (இறக்கையில்) செலுத்த வேண்டும். மேலும் வெள்ளை கழிச்சல் நோய் நாட்டுக் கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் கோழிகளுக்கு மூலிகை மருத்துவ முறைகளை பயன்படுத்தி வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.