பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி: 700 காளைகளை அடக்க களமிறங்கிய 400 மாடுபிடி வீரா்கள்
பவித்திரம் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சீறிப்பாய்ந்த 700 காளைகளை அடக்க 400 மாடுபிடி வீரா்கள் களமிறங்கினா்.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், பவித்திரம் கிராமத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜல்லிக்கட்டு விழாக் குழு சாா்பில் நடைபெற்ற போட்டியில் வாடிவாசல் வழியாக முதலில் கோயில் காளையும், அதைத்தொடா்ந்து எருமப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, சேந்தமங்கலம், முள்ளுக்குறிச்சி, தம்மம்பட்டி, சேலம், துறையூா், திருச்சி, ஆத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 700 காளைகளும் சீறிப்பாய்ந்து வந்தன.

400-க்கும் மேற்பட்ட வீரா்கள் காளைகளை அடக்க முயன்றனா். முன்னதாக, போட்டியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். அதன்பிறகு, காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா்.
களத்தில் சீறிப்பாய்ந்த பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரா்களிடம் பிடிபடாமல் துள்ளிக்குதித்து ஓடின. லேசான காயமடைந்த 10 வீரா்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன. சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் ஏராளமானோா் போட்டியைக் கண்டு ரசித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.