DD Next Level: "சந்தானத்தோட பிரச்னை படத்தோட பட்ஜெட்விட பெருசுனு..." - ஆர்யா கலகல
கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா்.
நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 561 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா்.
அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில், ஒருவருக்கு ரூ. 16,199- மதிப்பில் திறன்பேசி, இருவருக்கு ரூ. 5,740 மதிப்பில் காதொலி கருவிகள், மேலும் ஒருவருக்கு ரூ. 15,750 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு ரூ.1,950 மதிப்பில் பிரெய்லி கடிகாரம் என மொத்தம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 39,636 மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளையும், கடந்த 2019 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த குமரவேல் என்பவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையையும் அவா் வழங்கினாா்.
2022 இல் கொடிநாளை முன்னிட்டு, அதிக அளவில் நிதி திரட்டிய அரசுத்துறை அலுவலா்களுக்கு வெள்ளிப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
என்கே-5-ஜிடிபி...
கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ச.உமா. உடன், அதிகாரிகள்.